பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

தமிழ் இன்பம்



தமிழ்நாட்டு நாடக மேடையில் நடைபெறும் கோவலன் என்னும் நாடகம் பழந்தமிழ்க் காவியமாகிய சிலப்பதிகாரத்திலுள்ள சிறந்த கதையைத் தழுவி எழுந்தததாகும். ஆயினும் நாடகக் கண்ணகிக்கும் காவியக் கண்ணகிக்கும் உள்ள வேற்றுமை புல்லுக்கும் நெல்லுக்குமுள்ள வேற்றுமையைப் போன்றது. கோவலனைக் 'கோவிலன்' என்றும், கண்ணகியைக் ‘கர்னகி என்றும் சிதைத்து வழங்கும் சிறுமை ஒரு புறமிருக்க, கற்பின் கொழுந்தாகிய கண்ணகி, நாடக மேடையில் ஆவேசமுற்று வெறியாட்டயர்வதும், தவறிழைத்த பாண்டியன் மார்பைப் பிளந்து அவன் குடரை மாலையாக அணிந்து குருதியிலே திளைத்துக் கூத்தாடுவதும் அருவருக்கத்தக்க காட்சியன்றோ? பெண்மைக்குரிய நாணமும் மென்மையும் அமைந்த நல்லியற் கண்ணகியை அலகைபோல் அலற வைத்தல் அழகாகுமோ? காளியாட்டங்கண்டு கல்லார் உள்ளங்களிக்கும் என்னும் காரணத்தால் கண்ணகியின் மென்மையை அழித்தல் முறையாகுமோ? அன்றியும், நீதி வழுவா நெறி முறையில் நின்ற நெடுஞ்செழியனது உயிரை வலிந்து பிழிதலும் வேண்டுமோ? நீதி தவறியது என்று அறிந்த பின்னர் அவ்வரசன் உயிர் வாழ இசைவானோ?

நாடகக் கண்ணகியின் தன்மை இவ்வாறாக, காவியக் கண்ணகியின் செம்மையையும் மேன்மையையும் சிறிது காண்போம்; மதுரை மாநகரில் கோவலன் கொலையுண்டிறந்தான் என்றறிந்த கண்ணகி பாண்டிய மன்னனிடம் வழக்குரைத்து, நீதியை நிலை நிறுத்துமாறு அவன் மாளிகையினுள்ளே சென்றாள். காவி மலரனைய கண்கள் கண்ணிர் சொரிய, கருங்கூந்தல்