பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காவிய இன்பம்

85


இங்ஙனம் அறநெறி பிழைத்த அரசனுக்கு அறமே, கூற்றாக அமைந்தது. அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றமாம் என்பது தமிழ் நாட்டு அரசியற் கொள்கையாகும். இவ்வுண்மையை உணர்த்துதல் சிலப்பதிகாரத்தின் குறிக்கோள் என்பது,

"அரைசிய்ல் பிழைத்தோர்க்கு அறம்கூற் றாவதும்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டு மென்பதும்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்”

என்ற அழகிய அடிகளால் அறியப்படும். அரசியல் பிழைத்தோரை அறமே ஒறுக்குமென்றும், கற்பமைந்த மாதரை மக்களும் தேவரும் போற்றுவரென்றும், வினையின் பயனை விலக்கலாகா தென்றும், இவ்வுலக மாந்தர் அறிந்து வாழுமாறே இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றினார் என்பது இதனால் இனிது விளங்கும். இவ்வுண்மைக்கு முற்றும் மாறாக, அரசியல் பிழைத்த பாண்டியன் அறத்தால் ஆவி துறவாது, கண்ணகியின் மறத்தால் ஆவி துறப்பதை நாடக மேடையிலே காண்கின்றோம்! கணவனான கோவலனையன்றி ஆடவர் எவரையும் சிந்தையாலும் தொடாச் செம்மை வாய்ந்த கண்ணகி, பாண்டியன் மெய் தீண்டி, அவன் மார்பைப் பிளந்து, உயிரைப் பருகப் பார்க்கின்றோம்! இவ்வாறு, தமிழ் நாட்டு மன்னர் அறமும், மாதர் கற்பும் நிலைகுலையுமாறு நிகழ்த்தப்பெறும் கூத்தைக் கண்டு கல்லார் நெஞ்சம் களிக்குமெனினும் பழந்தமிழ் நாட்டின் பெருமை பாழ்படுவதைக் கண்டு பயனறிந்தோர் வருந்துவர்.