பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காவிய இன்பம்

89


ஆங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்"

என்று பரிந்து பாடிய பாட்டில், சேரன் செங்குட்டுவன் தம்பியாகிய இளங்கோவடிகளைப் போற்றுகின்றார் பாரதியார்.

இத்தகைய சிலப்பதிகாரத்தின் காலத்தைத் தெரிந்துகொள்வதற்குச் சேரன் செங்குட்டுவன் காலத்தை ஆராய்ந்து அறிதல் வேண்டும். வீரனாகிய அச்சேரனைப் பல புலவர்கள் பாடியுள்ளார்கள். அவர்களுள் பரணர் என்பவர் ஒருவர். தமிழ்நாட்டில் சங்கப் புலவர்கள் என்று பாராட்டப்படுகின்ற புலவர்களுள் பரணருக்கும் கபிலருக்கும் ஒரு தனிப் பெருமையுண்டு. 'பொய்யறியாக் கபிலரோடு பரணர் ஆதிப் புலவோர்’ என்ற வரிசையில் வைத்துப் புகழப்பட்ட பரணர், சேரன் செங்குட்டுவனைப்பற்றிப் பாடிய பாடல்களுள் பதினொன்று நமக்குக் கிடைத்துள்ளன. பரணருடைய புலமையையும் பண்பையும் பெரிதும் மதித்த சேரன், அவருக்குச் சிறந்த பரிசில் அளித்ததோடு தன் மகனையும் அவரிடம் மாணாக்கனாக ஒப்புவித்தான் என்பது பண்டை நூல்களால் விளங்குகின்றது. எனவே, சங்கப் புலவவர்களாகிய பரணர் முதலிய சான்றோர் வாழ்ந்த காலமே செங்குட்டுவன் காலமாகும்.

அக்காலத்தை இன்னும் சிறிது தெளிவாகத் தெரிந்துகொள்வதற்குச் சிலப்பதிகாரமே ஒரு சிறந்த சான்று தருகின்றது. கண்ணகியின் திருவிழாவிற்குச் சேரன் செங்குட்டுவன் அனுப்பிய அழைப்புக் கிணங்கி வஞ்சி மாநகரில் வந்திருந்து, பத்தினிக் கடவுளை வணங்கிய அரசருள் ஒருவன், கடல் சூழ் இலங்கைக்