பக்கம்:தமிழின எழுச்சி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 9

மருங்கே உள்ள தச்சுத்தொழில், படைத்தொழில் முதலியவையே துணைத் தொழில்கள் எனப்படுவன.

அடுத்துப் பொருளியல் என்னும் பெரும் பிரிவில் அரசுப் பொருள், குடிப்பொருள் என இரு கூறுகள் அடங்கும். அரசுப் பொருளை இயற்பொருள் என்றும், ஈட்டுப் பொருள் என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். அரசியலாரின் நேர்முக வருவாய்க்கு உட்பட்ட பொருள் அரசுப் பொருள் என்றும், குடிகளிடம் போயடங்கும் செல்வம் குடிப்பொருள் என்றும் பெயர் பெறும்.

இயற் பொருள் என்பது ஆறு, மலை, காடு, கடல் முதலியவற்றினின்றும்; பொன், வெள்ளி, இரும்பு முதலிய சுருங்கைகள் வழியும் அரசியலார்க்குக் கிடைக்கின்ற செல்வம் ஆகும். ஈட்டுப் பொருள் என்பது மக்களிடமிருந்து ஈட்டுகின்ற இறை, தண்டம் முதலியனவாகும். இனிக் குடிப் பொருளை இரு வகையாகப் பிரிக்கலாம். அவை வளர் பொருள் என்றும், தளர் பொருள் என்றும் பெயர் பெறுவன. ஆடு, மாடு, உழவு, வெளிநாட்டு வணிகம் முதலியன வளர் பொருள்கள் என்றும், உண்டலும் உடுத்தலும், ஆகியவற்றால் குறையும் பொருள்கள் தளர் பொருள்கள் என்றும் பெயர் பெறும்.

மூன்றாவதான உளவியல் அல்லது பண்பியலை இரு கூறுகளாக்கலாம். அவை குடிமை, ஒழுக்கம் என்பனவாகும், குடிமையுள் ஒரு நாட்டு மக்களுக்கு வேண்டப்படும் மொழிப்பற்றும் நாட்டுப் பற்றும், மக்கட் பற்றும் அடங்கும். ஒழுக்கம் அவர் ஒழுகலாகும் ஒழுக்க நெறிகளைக் காட்டுவதாகும். இனிக் குடிமை என்பது ஆள்நர் பணிதல், மக்கள் இணைவு என்ற இரு பிரிவுகளால் அடங்கும். ஆள்நர் பணிதலானது ஆள்வோர் இடும் கட்டுப்பாடுகட்கு அடங்குதல். அவர்க்குத் துணை நிற்றல் முதலியவையும், மக்கள் இணைவு என்பது, மக்களோடு கொள்ளும் இணைந்த வாழ்வையும் குறிப்பனவாகும். அடுத்து ஒழுக்கம் என்பது, தன்னொழுக்கம், பிறர் ஒழுக்கம் என இருவகையாக விரியும், தன்னொழுக்கம் என்பது, தனி ஒருவரது ஒழுக்க நிலையும், குறையும் என்றும்; பிறர் ஒழுக்கம் என்பது தன் நிலையாலும், குறைவாலும் பிறர்க்குச் சாரும் விளைவு முறைகள் என்றும் பொருள்படும். குடியனும், விலைமகளும் தன்னொழுக்கங் குறைந்தவர் என்றும், தம்மாற் றமக்கே தீங்கு விளைவித்துக் கொள்ளுவர் என்றும்; களவு, கொலை முதலிய ஒழுக்கக் கேடுகளைக் கொள்வார் தமக்கே யன்றிப் பிறர்க்குங் கேடு சூழுவர் என்றும் உய்த்துணர்க.

இதுகாறும் ஒருவாறு பகுத்துக் காட்டப்பட்ட முப்பெரும் பிரிவாலும், அவற்றுள் அடங்கும் இருபத்தொரு பாகுபாடுகளாலும்,