பக்கம்:தமிழின எழுச்சி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 


திராவிட மரபு காக்கப் பெற்றது !


அரசியல் நிலைகளில் மக்கள் போதிய அறிவும் தெளிவும் பெற்றாலொழிய தேர்தல் முடிவுகள் எவருடைய கணிப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் பெரும்பாலும் ஒத்துவரா. ஆனால், மூன்றாம்படி பொதுநிலை மக்கள் என்ன விரும்புகின்றனர் என்பதை ஒருவாறு கணிக்கத் தெரிந்தவர்கள், தேர்தல் முடிவை முன்கூட்டியே ஓரளவு அறிந்திருந்தனர். ஏனெனில் பெரும்பான்மை என்பது, நம் நாட்டைப் பொறுத்தவரை ஒரு குருட்டுத்தனமான போக்கை உடையது. ஆனால், பெரும்பான்மை மக்களால் விரும்பப் பெறுவதுதான் குடியாட்சியின் அடிப்படை இலக்கணம் என்று வரையறுத்து விட்டபின், அவ்வகையில் அமைந்த ஓர் ஆட்சியை எவ்வகையானும் தகுதியின்மை காட்டிப் பேசுவது நடுநிலையாக இருக்கமுடியாது. வேண்டுமானால் பெரும்பான்மையை நாம் வரையறுக்க எடுத்துக் கொண்ட முறைகளில் தவறுகள் இருக்கலாம்; அத்தவறுகள் திருத்தப்பெறாதவரை, தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களை வைத்து, அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களைக் குறைகூற முடியாது. நாம் விரும்புபவர்களைத் தேர்ந்தெடுத்தால் மக்கள் அறிவுடையவர்கள் என்பதோ, விரும்பாதவர்களைத் தேர்ந்தெடுத்தால் அவர்கள் அறிவற்றவர்கள் என்பதோ, தன்னலம் மிகுந்த அரசியல் புரட்டாகும். தேர்தல் நடப்பில் எவ்வகைச் சூழ்ச்சியோ, ஏமாற்றோ இல்லாதவரை, தேர்தல் முடிவு எத்தகையதாக இருப்பினும், குடியரசமைப்பில் நம்பிக்கை உடையவர்கள் அனைவரும் அதனை ஒருமனதாக ஒப்புக்கொள்ளவே வேண்டும், மக்களின் முடிவு இறைவனின் முடிவு என்பதும் இதனால்தான்! எனவே, தமிழகத்தைப் பொறுத்த வரையில்