பக்கம்:தமிழின எழுச்சி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 107

கொள்ளாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தம் அறியாமையாலோ, அக்கறையின்மையாலோ, நம் மொழிக்கும், இனத்திற்கும் செய்யத் தவறிய நன்மைகளைக் காலத்தாலும் இடத்தாலும் பொருளாலும் தேர்ந்து செய்து முடித்தல் வேண்டும். தாங்கள் செய்துவிட இருக்கும் தவறுகள் தங்கள் தனிப்பட்ட நலன்களுக்குச் செய்துகொண்டு விடும் கேடுகளாகிவிடும் என்று எண்ணிவிடாமல், தங்கள் மொழி, இன மரபுகளைக் கட்டிக்காக்கத் தவறிய குற்றங்களாகி விடும் என்று கருதிக்கொள்ளுதல் வேண்டும், மொத்தத்தில் இவ்வினத்தையும் மொழியையும், இவர்கள் காலத்தில் ஒருபடி முன்னேற்றி விடுவதில் அன்பும் அக்கறையும் கொண்டு உழைப்பதே தங்கள் கடமையாகக் கொள்ள வேண்டும்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் திரைப்படக் கலைஞர் திரு. ம.கோ.இராமச்சந்திரனுக்கு இருக்கும் கடமைகள் ஏராளம்! அவர் கடந்த காலத் திரைப்படங்களில் வந்த பாடல்கள் வழியாகவும், உரை யாடல் வழியாகவும், வெளிப்படுத்திய மக்கள் நலக்கொள்கைகள் ஏராளம்! தொழிலாளியாகவும், முதலாளியாகவும், பொது நலத் தொண்டராகவும் அவர் நடித்துக்காட்டிய நடிப்பையும், கூறிய உறுதி மொழிகளையும் நம்பியே மக்கள் அவர் கையில் தங்களை ஒப்படைத் துக் கொண்டனர் என்று அவர் உறுதியாக நம்புதல் வேண்டும். அவர்களுக்காக, அவர்கள் எதிர்பார்க்கப் பெறாத - ஆனால் அவர்கள் இனத்திற்கும் அவர்கள் மொழிக்கும் என்றென்றும் நிலையாக இருந்து கட்டிக் காக்கும் நன்மைகளை, கடந்த காலங்களில் இப் பேரினத்தின் 'ஆற்றல் சான்ற பெருந்தலைவர்களாக வீற்றிருந்த பெரியாரும் அண்ணா வும் கூறிச் சென்ற கொள்கைகளையும் அவற்றின் ஆணிவேராக அமைந்த இன நலத்தையும் மொழிநலத்தையும் ஊக்கமுடன் பேணிக் கொள்ளுதல் வேண்டும்.

தமிழர்களின் தலையாய மொழி, இன நலங்களைச் சிதைப்பதற்காகவே வடநாட்டுத் தலைவர்களால் உருவாக்கப் பெற்ற இந்திக் கொள்கைகளை திரு. ம.கோ.இரா. வின் ஆட்சி சுக்கு நூறாக்க வேண்டும்; இந்தி வல்லாண்மையை ஒரு சிறு அளவிலேனும் தமிழகத்தில் தலையெடுக்க விடாமல் தடுத்து நிறுத்துதல் வேண்டும். இந்தி நுழைவு, தேசியம் என்னும் பெயரால் செய்யப்பெற்று வரும் கொடுமையான ஒரு செயலாகும். இக்கொடுமைச் செயலை வடநாட்டு அரசியல் தலைவர்கள் எவரும் தவறானது என்று என்றைக்கும், எந்த நிலையிலும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆட்சி வகையில் தமிழர்களுக்கு அவர்களால் இழைக்கப்படும் அரசியல், பொருளியல், குமுகாயவியல்,