பக்கம்:தமிழின எழுச்சி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 
உலகத் தமிழ்ப் பண்பாட்டு
இயக்க முதல் மாநாடு


ஆழக்கால் வைப்பதினும் அகலக்கால் வைப்பதில் தமிழர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். தமிழரின் சீர்குலைவுக்கு இதுவும் ஒரு தலையாய கரணியம் என்பதை நடுநிலையான உள்ளத்துடன் எண்ணிப் பார்ப்பவர்கள் உணரமுடியும். எனவேதான் ஓரிடத்தில் தொடங்கப்பெற்ற ஒன்றை உலகளாவிச் செய்வதில் தமிழரிடையே பலவகையான முயற்சிகளும் முனைப்புகளும் நடந்து வருகின்றன. அடிப்படையை வலுப்படுத்தாமல் வினையை அகலமாகச் செய்துவிட முடியாது என்பது நம் கொள்கை. அவ்வாறு செய்கின்ற ஒரு வினை வெற்று ஆரவாரமாகவோ, சிலர் தம் பெயர்களை விளம்பரப்படுத்திக் கொள்ளவோ தான் பயன்படுமேயன்றி, உருப்படியாக எந்த வகையான பயனையும் விளைவித்துவிட முடியாது.

திடுமென ஓர் இயக்கத்தைத் தோற்றுவிப்பதிலும், அதனை இறுதிவரை கட்டிக்காக்க வியலாமல் தோல்வியுறுவதிலும் தமிழர்கள் மிகச்சிறப்பான இடத்தைப் பெற்றவர்கள்.

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

- என்பது திருக்குறள். அதனால்தான் உலகளாவித் தோற்றுவிக்கப் பெறும் தமிழரின் பல இயக்கங்கள் மிகச் சிறுகால எல்லையிலேயே இடைமுரிந்து மடிந்து போகின்றன.

நம்மில் பலவகையான கருத்து வேறுபாடுகள் எப்பொழுதுமே உண்டு. கருத்து வேறுபாடுகள் ஒரு வகையில் தவறும் அன்று. ஆனால்