பக்கம்:தமிழின எழுச்சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 11

போல் முன்னேறாது, பின்னிறங்குவர் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாம். அரிதின் முயன்று, பொருளும் வளமும் பகட்டும், உழவு முதலிய தொழில்களை விட்டு. எளிதின் முடுக்கிப் பொருளீட்டும் பொறிகளோடு தாமும் தேய்ந்து போகின்றனர். பின்னே என்னே இவர் தம் அறியாமை!

இனி, மக்களின் உளவியல் வளர்ச்சியோ. பல்லாயிர ஆண்டுகட்கு முன்னிருந்ததை விடப் பாழ்நிலை பெற்றதாகும். அறிவியல் வளர்ச்சிக்கு மிகத்தேவையான மொழிப் பற்றும், மக்கட் பற்றும் இக்கால மக்களிடம் அறவே இல்லை என்னலாம். இருக்கும் ஒரு சிலரிடமும் ஒழுக்கக் கேடுகள் மலிந்து இருக்கின்றன. அதனால் இவர் ஒரு பயனுங் காணப் போவதில்லை. உழைக்காது உண்டலும், உறங்காது களித்தலும், உடல் தெரிய உடுத்தலுமே, தாம் வாழும் பெரு வாழ்க்கை என்றும், அவற்றிற்குத் தேவையான பொருளீட்டிக் கொள்ளப் போதிய கல்வியே கல்வியென்றும், அக்கல்வி கற்ற முன்னேற்றமே நிறை முன்னேற்றம் என்றும் இழுக்கி எண்ணுவார்முன், எம் உரை எத்துணைப் பயனையும் விளைவியாது என்று அறிவோம். இருப்பினும் பள்ளங்களில் வீழ்ந்தோர் படுந்துயரங்காட்டி அம்மருங்கு போவாரில் நூற்றில் ஒருவரையாவது தடுக்கவே இதனை எழுதுகின்றோம்.

குடிமையில்லாத குடிமக்கட்கும் அவர் தம்பால் காணும் ஒழுக்கக் கேடுகட்கும் பெருந்துணையாக நிற்பன சாதிப் பாகுபாடுகளும், கட்சிப் பூசல்களும், போலி நாகரிகமும் ஆகும். இந்நாட்டில் மக்கட் பண்பாடு என்ற தெளிந்த நீர்ச் சுனையில் சாதிக் கேடுகளான பாசிகள் படர்ந்திருக்கின்ற வரை, அச்சுனை நன்னீர்ச் சுனையாகாது; நச்சுப் பொய்கையே ஆகும்.

இதுகாறும் சுருங்கக் கூறியவற்றால் ஒருவாறு நந்தமிழர் முன்னேற்றத்திற்குப் பெருந் தடையாக நிற்கும் தடைக் கற்களை இவை இவை என்று உய்த்துணர்ந்து, அக்கற்களை உருட்டிக்கொண்டு போய் உவர்கடலில் தள்ளும்வரை நம் முன்னேற்றம் வெறுங் கானல் நீரே என்று உணர்தல் வேண்டும்.

தென்மொழி இயல் - 1, இசை - 3, செபுதம்பர் 1959