பக்கம்:தமிழின எழுச்சி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

124 • தமிழின எழுச்சி

6ஆகிய மறைந்துபோன அத்தனைத் தலைவர்களின் படங்களையும் போட்டு, அரசு அவர்கள் வழியில் மக்களுக்குழைப்பதாக ஓர் ஏமாற்று விளம்பரம்! எத்தனை மூடர்கள் இவர்கள்! அந்த விளம்பரத்தில் உள்ள தலைவர்களெல்லாரும் உயிரோடு இருந்தபொழுது அவர்களை நேருக்கு நேராகவும், மறைமுகமாகவும் எதிர்த்துக் கொண்டும் ஏசிக் கொண்டும் திரிந்த இவர்கள், அவர்கள் உயிரோடு இருந்த பொழுது அவர்கள் கூறிய கருத்துரைகளையெல்லாம் காதிலும் போட்டுக் கொள்ளால் செருக்கித் திரிந்த இவர்கள், அவர்கள் மறைந்தபின் அவர்களின் பிணங்களையன்று, படங்களை வைத்துக் கொண்டு எத்தனை வகையில் ஆலோலம் பாடுகிறார்கள். இவர்களால் ஏமாற்றப்படும் மக்கள் நம்மவர்கள் தாமே! எத்துணை இரங்கத்தக்கது! விளக்கு மாற்றுக்கு இவ்வளவு பெரிய பட்டுக்குஞ்சமா? விளம்பரம் வாணிகத்துக்கு வேண்டியதுதான். அரசியலுக்கு அது வேண்டியதில்லை; இக் காலத்தில் ஓரளவு அஃது அரசியலுக்கும் வேண்டியதாக இருந்தாலும், அதற்காக இப்படியா? அதுவும் அரசுப் பணத்தில்! இன்னும் வானொலி, திரைப்படம், தொலைக்காட்சிகளில் வேறு அரசியல் விளம்பரங்கள் ஏராளமான பணச்செலவுக்கு வழி வைக்கின்றன.

இனி, இவர்கள் அணிப்படையில் சேர்ந்த ஒரு கற்றுக்குட்டி அமைச்சர், தாம் கனவிலும் எண்ணாத ஒரு நிலையில், தம்மை ஓர் அமைச்சராகக் கொண்டு வந்து நிறுத்திய தம் முதலமைச்சர் பெருமானுக்கு, ஒரு விழாவில் நன்றி சொல்கிறார், இப்படி : 'இவர் (இம் முதலமைச்சர்) நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தைப் பதினேழு முறைகள் பார்த்தேன்; அதனால் தான் அமைச்சராகிவிட்டேன்' என்று. எப்படி இருக்கிறது, தமிழகத்தின் அமைச்சராக வருவதற்குரிய தகுதி இலக்கணம்! அதே விழாவில், அதே பொதுமக்கள் முன்னிலையில் இன்னும் ஒருபடி மேலே சென்று கலைமகள் போன்ற ஒரு பெண் அமைச்சர் சொல்கிறார்; 'இவர் (முதலமைச்சர்) நடித்த 'ரிக்சாக்காரன்' படத்தைப் பார்த்துத்தான் நான் அ.இ.அ.தி.மு.க.வில் சேர்ந்தேன்; அதன் பின் எனக்குக் கொள்கைகள் விளங்கின; பாடுபட்டேன்; அமைச்சராகி விட்டேன்' என்று. அட இழவே தமிழகத்தின் அரசியல்தாம் எத்துணை யளவில் இழிந்து போய் விட்டது!

இன்னொரு வேடிக்கை பாருங்கள் முதலமைச்சராகிவிட்ட ஒருவர் வெய்யில் நேரத்தில், தாம் வணங்குவதாகக் கூறிக்கொள்ளும் முன்னாள் முதல்வர் ஒருவரின் அடக்கமேடைக்கு மாலை போட்டு வணங்குவதற்காகப் போகிறார். அக்கால் அருகிலிருந்த அவர் தொண்டரடிப் பொடியாகிய (அவர் பெயரெடுத்த) அமைச்சர் பெருமகன் ஒருவர்,