பக்கம்:தமிழின எழுச்சி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் • 127

பறக்கிறது. கல்விக் கூடங்கள், கலையரங்குகள், பண்பாட்டு மேடைகள், அரசு அலுவலகங்கள், விழாக்கள், வேடிக்கைகள் முதலிய அனைத்திலும் திரைப்படத் தாக்கங்கள்! நாடு எப்படி உருப்படும்? முன்னேறும்? சிறிது எண்ணிப் பார்க்க வேண்டாமா?

இக்கால் உள்ள அரசியல் தலைவர்களிடத்தில் ஒழுக்கம் உண்டா? நேர்மை உண்டா? வாய்மை உண்டா? பொதுமக்கள்முன் இவர்கள் பேசுவது, செய்வது, கண்ணீர் வடிப்பது, இரங்குவது, அத்தனையும் நடிப்பு! வெறும் பசப்பான ஆனால் பகட்டான நடிப்பு! இவர்களின் வெற்று ஆரவார ஆட்சியில் பொதுமக்களுக்கு எப்படி நன்மை கிடைக்கும்? அமைச்சர்கள் தங்கள் ஆட்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் நேரத்தைவிட, விழாக்கள், வேடிக்கைகள், மாநாடுகள், கூட்டங்கள், கொண்டாட்டங்கள், கட்சி நடவடிக்கைகள், ஊர்வலங்கள், பட்டி மன்றங்கள், பாட்டரங்குகள், நாடகங்கள் முதலியவற்றில் ஈடுபடும் பொழுதுகள்தாமே மிகுதி! அதிகாரிகளிடம் இவர்கள் ஆளுமையின் வினைச்சுமைகளை விட்டுவிட்டு, இப்பொழுதுபோக்குகளிலேயே தங்கள் முழு நேரங்களையும் வீணடித்துக் கொண்டிருந்தால், இந்த நாடு எப்படி முன்னேறும்? மக்களுக்கு எப்படி நலன்கள் கிடைக்கும்? எனவேதான் மக்களும், மாணவர் போராட்டம், உழவர் போராட்டம், தொழிலாளர் போராட்டம், உழைப்பாளிகள் போராட்டம், காவலர் போராட்டம் முதலிய எண்ணிறந்த பேராட்டங்களில் ஈடுபட்டுத் தங்கள் உரிமைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த வேண்டியுள்ளது. கையூட்டுகள், தவறான சலுகைகள், சட்டப் புறம்பான நடவடிக்கைகள் நாடு முழுவதும், துறைகள் தோறும் பரவியுள்ளன. மதுவிலக்கு பேசப் பெறுகிறது. ஆனால் அதிகாரிகள் கடை நடத்துகிறார்கள். கையூட்டுகள் குற்றங்கள் என்று முழங்கப்பெறுகின்றன. ஆனால் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பணிகளிலும் நுழைய ஆயிரம், பத்தாயிரம், இருபத்தையாயிரம் என்று தொகை புரள்கின்றது. அமைச்சர்கள் வாங்கவில்லை; ஆனால் அவர்களுக்காக அவர்கள் முகவர்கள் வாங்குகிறார்கள். இந்நிலை பச்சையாக நாடெங்கும் நடைபெறுகிறது. ஏழைகள் விரட்டியடிக்கப் பெறுகின்றனர். இது குடியரசு நாடு என்று பீற்றிக் கொள்ளப் பெறுகின்றது. தமிழக ஆளுநரின் அண்மைக் காலப் பேச்சுகளையும் அறிக்கைகளையும் பார்த்தாலே இந்நிலைகள் எவ்வளவு வெளிப்படையானவை என்பது விளங்கும்.

வரலாற்றை எவரும் எழுதி அச்சிட்டுக் கொள்ளலாம் என்பதால், ஆளுக்கு ஒரு வரலாற்றை இவர்களே எழுதத் தொடங்கி, அதில் தங்களைப் பற்றியும், தம் நண்பர்களைப் பற்றியும் இந்திரன்' என்றும்