பக்கம்:தமிழின எழுச்சி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

132 • தமிழின எழுச்சி

பொதுநலத் தொண்டர்கள், அறிஞர்கள் யாவரும் பட்டம் பதவிகளுக்காகவே பேய்களாய் அலைந்து திரிகின்றனர்; அரசியல்காரர்களை நத்துகின்றனர். பதவிகள், அதிகாரங்களில் குறுக்கு வழிகளைக் கையாள்கின்றனர். வரும் எதிர்ப்புகளுக்காக அஞ்சித் துணிவிழக்கின்றனர். இத்தகையவர்கள் மக்கள் நலம் கருதுபவர்களாக இல்லை. ஒவ்வொரு வரும் ஒவ்வொரு வகையில் தலைவர்களாக இருக்கவே விரும்புகின்றனர். தந் நலமே இவர்களின் குறிக்கோளாக இருக்கிறது. இவர்களிடம் ஒழுக்கம் இருப்பதில்லை; உண்மை இருப்பதில்லை; நேர்மை இவர்களிடம் அறவே இல்லை .

இந்த நிலைகளையெல்லாம், சீரழிவுகளையெல்லாம் போக்குவதற்குத் தமிழிளைஞர்கள் ஒவ்வொருவரும் உறுதியெடுத்துக் கொள்ளுதல் வேண்டும். பொதுத்தொண்டுக்குத் துணிந்து முன் வருதல் வேண்டும். கொள்கை வேறுபாடுகளை மன வேறுபாடுகளாக வளர்த்துக் கொள்ளக் கூடாது. நல்ல விளைவுகளுக்கான வழிமுறைளைக் கலந்து பேசி, ஒரு துணையை வழிகாட்டும் தலைமையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அத்தலைமை காட்டும் வழியில் ஓர் உறுதிப்பாட்டுடன் பாடாற்றுதல் வேண்டும். முதலில் தொண்டுள்ளத்தவர்கள் ஒன்றுபடுதல் வேண்டும்; அடுத்து, அறிஞர்களுக்கிடையில், ஒருங்கிணைப்பு ஏற்படுதல் வேண்டும்; அதன்பின் தலைவர்கள், வழிகாட்டுபவர்கள் ஒற்றுமைப்படுதல் வேண்டும். தமிழினத்தை ஒரே வழிப்பாதையில் கொண்டு செலுத்தவல்ல, அரசியல் பூசலற்ற ஓரின ஆக்கக் கொள்கைக்கே அனைவரும் ஒட்டு மொத்தமாகப் போராடுதல் வேண்டும். ஒன்றிணைந்தால் அல்லது தமிழினத்திற்கு உய்தியில்லை என்பதை உறுதியாக எண்ணுதல் வேண்டும். சிறுசிறு கொள்கைப் பூசல்களுக்காக நாம் போரிட்டுக் கொண்டு அழிந்துபோதல் கூடாது. கொள்கை வேறு பாடுகளை மனவேறுபாடுகளாக நாம் வளர்த்துக் கொள்ளுதல் அறவே தவிர்க்கப்படல் வேண்டும். நம்மில் யார் தலைவராய் இருப்பது என்று எண்ணிப் பார்க்கும் மனநிலை நம் அனைவர்க்கும் வாய்த்தல் வேண்டும். தமிழ் இளைஞர்களும் இளைஞைகளும் தங்களை இதற்காகவே ஈகம் செய்து கொள்ள வேண்டும்.

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுஉடையது இல். (குறள் - 1021)

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல், (குறள் - 1026)


'தென்மொழி சுவடி-18, ஓலை 6 சன-பெப் 1982