பக்கம்:தமிழின எழுச்சி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 137


தமிழ்நாட்டை ஆளும் முதலமைச்சர் ஒருவர், தமிழ்நாட்டுக்கே - தமிழினத்திற்கே - அச்சாணியாக விளங்கும் தலையாய மூதறிஞர் - தெய்வப் புலவர் ஒருவரின் - சிலையமைய எதிர்ப்புத் தெரிவிக்கும் மிகக் கொடுமை வாய்ந்த மனவுணர்வு, அனைத்துத் தமிழர் நலன்களிலும் நஞ்சு சேர்ப்பதாகும். அத்தகைய ஒருவர் தமிழகத்தை ஆள்வதற்கும் தகுதியில்லையென்பதே நம் கருத்தாகும். ஒன்றுமறியாத ஏழை மக்களை தம் கவர்ச்சிப் பேச்சுகளாலும் கரவான நடிப்பாலும் ஏமாற்றி, அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட மாமதத்தால், 'திருவள்ளுவரின் சிலையைக் குமரிமுனையில் வைப்பது என் ஆட்சியில் நடவாது' என்று முதலமைச்சர் மறைமுகமாகத் தம் ஆரிய நண்பர்கள் உவக்குமாறு கருத்துக் கூறியிருக்கிறார். விவேகானந்தருக்கு இணையாக அங்குத் திருவள்ளுவர் சிலை அமையக் கூடாது என்பது இந்துமதப் பேயர்களின் கருத்தாக இருக்கலாம். அப்பேயர்களின் ஆட்டுவிப்புக்குத் தாமும் ஆடுகின்ற முதலமைச்சரின் தருக்குணர்வை என்னென்று சொல்வது?

இறுதியாக ஒன்றைக் கூற விரும்புகின்றோம். குமரிமுனையில் திருவள்ளுவர்க்கும் பெரியாருக்கும், அங்குள்ள விவேகானந்தர், காந்தி இவர்களின் சிலைகளையும் மண்டபங்களையும் விட மிகச் சிறந்த முறையில் சிலையும் மண்டபமும் எழுப்ப வேண்டும் என்பது தன்மானமும் இனமானமும் உள்ள தமிழர் ஒவ்வொருவரின் கோரிக்கையும் கொள்கையுமாகும். இவ் வேண்டுதல்கள் புறக்கணிக்கப் பெறுமானால் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் இதற்காகக் கடுமையான போராட்டங்களை, மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிகின்றோம்.

தென்மொழி சுவடி - 18, ஓலை - 12 சூலை - ஆகத்து 1982