பக்கம்:தமிழின எழுச்சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

14 • தமிழின எழுச்சி

  • நீங்கள் கணவர்க்கும் மலராயும், மக்கட்கு நீராயும், விருந்தினர்க்கு தாயாகியும், வேண்டார்க்குத் தணலாயும் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
  • நீங்கள் கணவர்தம்மை அன்பாலும், பண்பாலுமே ஆள்கின்றீர்! அவர் உங்களை என்றும் கீழாக எண்ணுவதில்லை. அவ்வாறு எண்ணி இடர் செய்வார் அறிவிலிகளே ஆவார். அவர் தம்மிட மிருந்து நீங்கள் விலக்குப் பெறலாம்.
  • உங்கள் குழந்தைகள் பெருமைக்கும், அவர்தம் சிறுமைக்கும் நீங்களே முதற் காரணமாக இருக்கின்றீர்! ஓய்வுக் காலங்களில் அவர்க்கு நல்லொழுக்கங்களைப் புகட்டுங்கள். தாய்க்குப் பணியாதார் யார்க்கும் பணியார்.
  • தாய்மொழிப் பற்றற்ற மூங்கைகளாக உங்கள் மக்களை வளர்க்காதீர்! நாட்டுப்பற்றும், இனப்பற்றும் மிக்கவராக அவர்கட்கு வழிகாட்டுங்கள்.
  • தமிழ்நாடு தாழ்ந்தமைக்கு நீங்களும் பொறுப்பு. பண்பும், அன்பும், அறனும் உங்களைவிட்டுப் புறம் போகில், அவற்றிற்கு ஏற்ற இடம் இவ்வுலகில் வேறெங்கும் இல்லை. இற்றைப் பொழுதில் நம் நாட்டில் இல்லாதிருப்பனவும் இவையே!
  • தாய்க்குலப் பெரு மடவீர்! தமிழ் நாட்டின் செல்வம் இங்குள்ள மலையும், காடும், ஆறும், கழனியும் ஆகும். இவற்றைக் கட்டிக்காக்க இங்குள்ள ஆடவர் இமையாது நிற்கின்றனர். அவர்க்குத் துணையாக உயிரினும் மேலாகக் காத்து ஒழுகுங்கள்.

தென்மொழி இயல் - 1 இசை - 3 செபுதம்பர் 1959