பக்கம்:தமிழின எழுச்சி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 149


இம் மடலைத் தாங்கள் விருப்பமாகப் படிக்க மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் உங்கள் தனிப்பட்ட ஒருவர்மேல் உள்ள பற்றினால் அன்று, தமிழின் மேலும், தமிழினத்தின் மேலும், தமிழ் நாட்டு விடுதலையிலும் நான்கொண்ட அசைக்க முடியாத, முன்னேற்றக் கொள்கையினால், இதைச் சொல்லியே ஆக வேண்டியிருக்கிறது. இம்மடல் உங்களைவிட, உங்கள் கழகத்தைச் சேர்ந்த பலர்க்கும், மிகக் கடுமையான சினத்தையும், வெறுப்பையும், ஏன் ஏளனத்தையும் கூட, என்மேல் எழச்செய்யும் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால், நீங்கள் என்னை இதுவரை, மதித்ததே இல்லை . அஃது உங்கள் இயல்பு. என் அளவிடற்கரிய இன மீட்பு, தமிழ்மீட்புப் பணிகளுக்கு ஒரு துளியும் துணை நின்றதில்லை. இருப்பினும் நான் சொல்லியாக வேண்டியிருக்கின்றது. 'செவிகைப்பச் சொல் பொறுக்கும் பண்புடமை' உங்களுக்குத் தான் நிறைய உண்டே . மேலும், 'உற்றநோய் நீக்கி, உறாஅமை முற் காக்கும்' பெற்றியனாக என்னைக் கருதிக் கொள்ளவும் வேண்டுகின்றேன். எனவே, இங்குக் கூறப்பெறும் கருத்துகளை நீங்கள் நன்கு சிந்தித்து, இறுதியாக ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இதற்குமுன் தங்களுக்கெழுதிய இரண்டு மடல்களிலும் எழுதிய கருத்துகளையே, மீண்டும் மீண்டும் நினைவுறுத்திக் கூறுகின்றேன்.

தமிழ் இனம் என்பது ஒரு மக்கள் கூட்டமட்டுமன்று; அதனோடு வழிவழியாகப் புழக்கத்தில் வந்து, நீண்ட நெடுங்காலமாகப் பண்பட்டு வளர்ந்து நின்ற, பெறற்கரிய, உலக முதன்மொழியாகவும் அதன் தாய் மொழியாகவும் உள்ள நம் அருமைத் தமிழ், அதனொடு விளங்கி நின்ற பண்பாடு, அவற்றை நன்கு உருவாக்கி, அதற்கடிப்படையாக இருந்து கொண்டிருக்கும் அரிய இலக்கியங்கள், அவற்றுள் கூறப்பெறும் அரும் பெரும் வாழ்வியல், உளவியல், உலகியல் கருத்துகள், அவை நின்று வளர்ந்தோங்கி அவ்வினத்திற்கு வாழ்விடமாக இருக்கும் ஒரு நிலப்புலம் - இவை அனைத்தையும் உள்ளடக்கியதே இனம். இவ்வினம் இன்று உலகச் சூழலில் சிக்கிச்சிதைந்து அழிவை நோக்கிப் போய்க் கொண்டுள்ளது, உங்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்கும்.

இவ்வினத்தை இன்று வெறும் ஆரவாரமும் அழிம்புத்தனமும், விளம்பரமும், கொழுத்த பணப்புழக்கமும் கொண்ட அரசியலால் மீட்டெடுக்க முடியவே முடியாது. ஒரு பெரும் மக்கள் புரட்சியால் மட்டுமே அதை வரப்போகும் அழிவினின்று காத்து நிலைநிறுத்த முடியும். எனேவ, நீங்கள் உங்களின் எஞ்சிநிற்கும் வாழ்நாளையும், உள்ளத்தின் - அறிவின் - ஆற்றல்களையும் அதன் முன்னேற்றத்திற்கும் விடுவிப்பிற்கும் பயன்படுத்த வேண்டுமென்று, இறைஞ்சி வேண்டிக் கொள்கின்றேன்.