பக்கம்:தமிழின எழுச்சி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 153

தமிழர்களுக்கும் தமிழ்மொழிக்குந்தாம் இன்னுஞ்சொன்னால் தமிழ்நாட்டுக்குந்தான் கேடுகள், நலிவுகள், அழிவுகள் மிகுதி. ஆனாலும் தமிழ்நாடும் இங்குள்ள தலைவர்களும் பிற சில மாநிலங்களைப் போலும், அங்குள்ள தலைவர்களைப் போலும், வெறும் அரசியல் அதிகார அடிப்படையில் மட்டுமே தில்லியை எதிர்க்கின்றனர். வெறும் அரசியல் அதிகாரத்திற்காக மட்டுமே, நாம் தில்லியை எதிர்ப்பதால்தான் மற்றவர்களை விடத் தமிழர்களைத் தில்லி மிக எளிதாகவும், சூழ்ச்சியாகவும் அடக்கிவிடப் பார்க்கிறது. மதமூட நம்பிக்கைகளை அளவிறந்து பரப்பியும், கலை, நாடக, திரைப் படத்துறை அருவருப்புகளை மக்களிடத்துப் பரவலாக்கி, அவர்களின் அறிவுச் சிந்தனைகளைத் திசைதிருப்பியும், மக்களைத் தம் மொழி இனநல முயற்சிகளில் ஈடுபடாமல் தடுக்கிறது வெளிநாடுகளில் உள்ள தமிழர்களைத் தமிழர்கள் என்றுகூடச் சொல்வதில்லை; பாரதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி அவர்களின் துயரங்களைத் தமிழர்கள் உணராமல் இருக்கச் செய்கிறது. குறிப்பாகத் தமிழீழத்தவர்களை இந்திய இனத்தை சேர்ந்தவர்கள் என்றோ, பாரத இனத்தவர்கள் என்றோ கூறித் தமிழின உணர்வு வலிவடையாமல் செய்கிறதை அனைவரும் உணர்ந்திருக்கலாம்.

இன்று, தமிழீழச் சிக்கலைத் தில்லி அணுகுகின்ற முறையே, தமிழர்களை எல்லா நிலையிலும் மெலிவுபடுத்த வேண்டும் என்னும் கரவான குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கிறது. இல்லையானால், இலால்பகதூர் சாத்திரி காலத்திலிருந்து தமிழீழ ஏதிலிகளுக்கு ஒரு தீர்வு ஏற்படுத்தாமல், தில்லி, பேசாமல் இருக்குமா? இந்திராகாந்தி இறுதிவரை, தமிழீழப் போராட்டத்தில், இலங்கையின் கொடுந் தலைவன் செயவர்த்தனாவிற்கு மறைமுக ஆதரவே காட்டி வந்தார். வெறும் பேச்சுரை என்றும் வட்டமிசை மாநாடு என்றும், அவன் நடத்திய நாடகங்களுக்கு அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்றவர்களைச் சூதாட்டங்களாகவே பயன்படுத்தியுள்ளார்; இதை நாம் பலமுறை வெளிப்படையாகவே எடுத்துக் கூறியும், அமிர்தலிங்கம் போன்றவர்கள், தம் மெலிவுத் தன்மைகளைக் கட்டிக் காத்துக் கொள்வதற்கேற்ற வாய்ப்பாகவே அந்த ஏற்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டனர். குதிரை திருட்டுப் போனபின், கொட்டடியை இழுத்துப் பூட்டும் பேதைகள்போல், இன்று தமிழீழம் ஒன்றே நம் குறிக்கோள் என்றும், பேச்சுரைகளாலும், வட்டமிசை மாநாடுகளாலும் பயனில்லை என்றும் கூக்குரலிடுகின்றனர். பட்டணம் பறிபோனபின் எல்லைக்கதவுகளை இழுத்துப் பூட்டுகின்ற கோமாளி அரசர்களாக இவர்கள் பேசி வருகின்றனர். இவர்கள் பேச்சுரை என்றும் தூதுரை