பக்கம்:தமிழின எழுச்சி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 155


எத்தனையோ வெளிப்படையாக நாம் எழுதியும் பேசியும் ஆகிவிட்டது. நம் தொடைநடுக்கங்கள் இன்னும் தீரவில்லையே! என்ன செய்வது? நமக்கோ போதுமான ஆள் வலிவோ, பொருள் வலியோ இல்லை. இவை இரண்டையும் வருவித்து (வரவுவைத்து)க் கொண்டவர்களன்றோ எழுந்து நின்று போராடவேண்டும். வெறும் அடையாள மறியலும், அறைகூவலும் நடந்து என்ன பயன்?

சிங்களவர்களுக்கஞ்சி நாள்தோறும் நூற்றுக்கணக்கில் தமிழீழ ஏதிலிகள் தமிழகத்திற்கு வந்து கொண்டே உள்ளனர். நாள்தோறும் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்; தமிழ் இளைஞர்கள் உறுப்புச் சிதைவு செய்யப்படுகின்றனர்; தமிழ்ப் பெண்களும் தாய்மார்களும் மானமிழந்து, தற்கொலை செய்து கொள்கின்றனர்; குழந்தைகள் அழிக்கப்படுகின்றனர்; குடியிருப்புகள் கொளுத்தப்படுகின்றன; நாள்தோறும், வேளைதோறும் அங்குள்ளவர்கள் குற்றுயிராயும் கொலையுயிராயும் நடுங்கிச் சாகின்றனர். ஐயகோ! நினைத்தால் நெஞ்சு புண்ணாகிறது! குருதி கொப்பளிக்கிறது! உயிர் சுருங்கிச் சுண்டுகிறது! எந்தமிழ் இனமே! நீ என்றைக்குத்தான் மான எழுச்சியுற்று வீறுகொள்ளப் போகிறாயோ?

ஓர் எழுச்சி பெறாமல், விடுதலைச் சூள் உரைக்காமல், இவை அனைத்துக்குமான ஒட்டுமொத்த முடிவு ஒன்று ஏற்படும் என்று ஏ! இளைஞனே! நீ எண்ணுகிறாயா? ஏ! இளைஞையே! நீ கருதுகிறாயா? ஏ! தமிழ்த் தலைவனே! நீ கற்பனை செய்கிறாயா? முடியாது! முடியாது; முடியவே முடியாது! இவ்வழிவுக்கெல்லாம் ஒரு விடிவு காண்பதற்கு, ஒரு முடிவு செய்வதற்கு, நீ எழுச்சி பெற்றே ஆதல்வேண்டும்! அதுதான் வழி; அதுதான் உறுதி!

இம் முடிவுக்கு, இப்பொழுது தமிழீழக் கூட்டணித் தலைவர்கள் வந்ததுபோல் நீங்களும் ஒருநாள் வருவீர்கள்! அப்பொழுது நீங்கள் எம் முடிவை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்! எம் வழியைத்தான் பின்பற்றியாக வேண்டும்! எம் பாதையில்தான் வந்தாக வேண்டும்! ஆனால், அந்த நாளைக்குள் எம் இனமே அழிந்து போய்... நீங்களும் நானும் எங்கெங்கோ காற்றிலன்றோ அலைபரவிக் கொண்டிருப்போம்! ஆனால் அக்கால், நம்மைப் பிரித்து உணர்வதற்கு நம் மரபினரில் எஞ்சியவர்கள் ஓரிருவர்கூட இல்லாமலா போய்விடுவர்? ஏ! அந்தக்கால் இருளே, நீ இன்னும் சிலநாள்கள் எட்டியிரு! அதற்குள் வந்துவிடாதே!


தென்மொழி சுவடி-21, ஓலை-4 சனவரி-பெப்ருவரி 1985