பக்கம்:தமிழின எழுச்சி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 161


பகுத்தறிவு என்பதை இனமுயற்சியாக அவ்வியக்கம் அறிவிப்பதையும் 'கடவுள் இல்லை' என்பதை அதன் கொள்கையாகப் பரப்புவதையுமே அது செய்து கொண்டுள்ளது பெரிதும் வருந்தத்தக்கது. பகுத்தறிவு என்பது மாந்த இனத்திற்கே பொதுவான ஓர் அறிவு முயற்சி. தமிழின முன்னேற்றத்துக்கான தனி முயற்சியன்று அது அதுபோலவே கடவுள் இல்லை என்பதும் அல்லது இருக்கின்றது என்பதும் ஓர் அறிவுக் கொள்கையாகவும் இருக்கலாம்; அல்லது மூட நம்பிக்கையாகவும் இருக்கலாம். அதற்கும் ஓர் இனத்தின் அடிமை நீக்கத்திற்கும். அல்லது உரிமை மீட்புக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. உலக உரிமை மீட்பு வரலாறுகளில் விடுதலை உணர்வுதான் செயல்பட்டு, அடிமைப்பட்ட இன முன்னேற்ற முயற்சிகளுக்குப் பயன்பட்டிருக்கின்றதே தவிர, பகுத்தறிவுணர்வோ இறைமறுப்புக் கொள்கையோ அல்ல. இக்காலும் உலகத் தேசிய இனங்கள் அத்தகைய கருத்துகளில் கவனம் செலுத்தாமல், உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டங்களையும் கருத்துகளையும் மக்களிடையில் பரப்புவதையே தம் இன முன்னேற்ற முயற்சிகளாகக் கொண்டு இயங்கி வருகின்றன. இனி, கடந்த காலத்தில் உருசியாவில் மார்க்சியக் கொள்கையை முன்வைத்துப் பெரும் புரட்சிப் போராட்டங்களை நடத்தி, நாட்டை மீட்டுத் தேசிய இனமுன்னேற்றத்திற்கு அடிப்படையான பொதுவுடைமைச் சமநிலைக் குடியரசை அமைத்துக் கொடுத்த இலெனின், எங்கல்சு போன்ற மேதைகளும், பகுத்தறிவையோ, இறைமறுப்புக் கொள்கையையோ தங்களின் இன மீட்புக்கும் அரசியல் அதிகார மீட்புக்குமான உத்திகளாகப் பயன்படுத்தவில்லை .

மேலும், தமிழினத்தின் முன்னேற்றத்திற்கு, முற்றமுடிந்த முடிபாகத் தமிழக விடுதலையே முதல் கொள்கையாகும். தமிழகம் விடுதலை பெற்றால்தான், தமிழினத்தின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் வாய்ப்பிருக்க முடியும். இவ்விடுதலை உணர்வை, இனவுணர்வாலேயே தட்டியெழுப்ப முடியும். இவ்வினவுணர்வையும், மொழியுணர்வாலேயே கட்டியமைக்க இயலும். வேறு நாடுகள் சிலவற்றில், ஒரே மொழி பேசும் மக்களே பிரிந்து கிடக்கின்றார்கள் என்பது, அங்கெல் லாம் தாய்மொழியுணர்வு ஒற்றுமைக்குப் பயன்படவில்லை யென்பதும், வேறுவேறு அடிப்படைகளைக் கொண்ட வேறுவேறு செய்திகள் ஆகும். அவற்றை யெண்ணி, இனவெழுச்சிக்கு மொழி பயன்படாதென்பது சரியான கொள்கையாகாது. தமிழ்மொழியைப் பொறுத்த அளவில் அதன் வழிப்பிரிந்த திராவிட மொழியினங்களைக்கூட தமிழ் மொழியாலும் அதன் வழிபட்ட பண்பாட்டாலும் நாம் ஒன்றுபடுத்திவிட முடியும்.