பக்கம்:தமிழின எழுச்சி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

168 • தமிழின எழுச்சி

தலைவர் அமைவுக்குத் தூக்கி நிறுத்திவிட முடியாது. அப்படி நிறுத்தி வைத்து விட வேண்டும் என்று ஒருவரும் கருதிவிடவும் கூடாது. தலைவர் தாமாகவே உருவாக வேண்டும். யாராலும் அவரை உருவாக்கிவிட முடியாது. அவ்வாறு உருவாக்கப்பெறும் தலைவரும் நெடுநாள்களுக்கு நிலைத்துவிடவும் முடியாது. மேலும், ஒரு துறையில் முழுத் தகுதிபெற்ற அறிஞரும்கூட, தம்மைத் தலைவராக ஆக்கிக்கொள்ள இயலாது. இக்கால் தலைவர்கள் எனப்பெறுவோருள் பலர் உண்மையான தொண்டராக இருப்பதற்குக்கூட தகுதிப்பாடு குறைந்தவர்களே!

இனி, இக்கால், பொதுவாகவே ஒரு கருத்து சுட்டப்பெற்று வருகிறது. அஃதென்னெனில், 'தமிழினத்திற்கு இன்னும் சரியான ஒரு தலைமை கிடைக்கவில்லை' என்பது. இஃது ஓரளவு உண்மையே! தலைவர்கள் பலராக இன்று தமிழகத்தில் உலா வரும் கட்சிகள், இயக்கங்கள் இவற்றின் தலைவர்கள் எல்லாரும் ஒவ்வொரு கூட்டத்தினரால் தலைவர்கள் என்று ஏற்கப் பெறுபவர்களே! இக்கால் உள்ள தலைவர்களுக்கெல்லாம், அவர்களெல்லாம் ஒப்புகின்றவாறு தலைவர் ஒருவர் இன்றுவரை உருவாகவில்லை என்பது உண்மைதான். ஆனால், அவ்வாறு உருவாகாமைக்கு நாம்தாம் பொறுப்பு என்பதை நாம் உண்மையாகவே அறிந்து கொள்ளவில்லை. ஏனெனில் நாம் எல்லாரும் இன்னும் நல்ல தொண்டர்களாக உருவாகவில்லை. 'இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சருக்கரை' என்பது போலவே, நாம் இக்கால் உள்ள தலைவர்களை எண்ணிக்கொள்ள வேண்டி உள்ளது. இஃது ஒருபுறம் இருக்கட்டும்!

இக்கால், நம் மொழி, இன, நாட்டு நலத் தொண்டர்களெல்லாரும் அரைகுறைத் தொண்டர்களாகவே உருவாகி உள்ளனர். கும்பல்களும், கையொலிப்பான்களும், கூடிக் கூச்சல் எழுப்புவார்களும், விளம்பர வேட்கை உள்ளவர்களும், பொறுக்கல்காரர்களும் உண்மையான தொண்டர் ஆகார். தலைமையின் வளராத நிலையே தொண்டின் வடிவம். நல்ல தலைவர் ஒருவர் உருவாகவில்லை என்னும்போது, நல்ல தொண்டர்களும் உருவாகவில்லை என்றே நாம் கருதிக்கொள்ளுதல் வேண்டும். நல்ல தூய தன்னலமற்ற தொண்டே அல்லது தொண்டர் கூட்டமே தலைவரை உருவாக்கும். தலைவர் வேறு எங்கிருக்கோ உருவாகி, இங்கு நமக்குத் தலைமை தாங்க வந்து விடமாட்டார். நம்மிடையிலிருந்துதான் நமக்கொரு தலைமை உருவாகவேண்டும். எனவே, இவ்வினத்திற்கொரு நல்ல முழுமையான தலைவர் உருவாகவில்லை என்று நாம் கூறும்போதே, நமக்குள்ள குறையையும் நாம்