பக்கம்:தமிழின எழுச்சி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 169

உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். பெரும்பாலும் இக் குறைபாட்டை உண்மையான தொண்டன் ஒருவன் உணரமாட்டான்; அவனுக்குத் தலைவன் யார், தொண்டன் யார் என்கின்ற ஆராய்ச்சி மனப்பாங்கெல்லாம் இருக்காது. தன் தொண்டுக் கடமையையே அவன் பெரிதாகக் கருதுவானேயன்றி, தன்னை எந்த நிலையில் வைத்து மக்கள் மதிப்பிடுகிறார்கள் என்கிற கவலையெல்லாம் அவனிடம் தோன்றுவதில்லை.

கடந்த காலத்தில் தமிழினத்திற்கு ஓரளவு ஒட்டு மொத்தமான தகுதிப்பாடுகள் உள்ள தலைவர் ஒருவரை நாம் சுட்ட வேண்டுமானால், தந்தை பெரியார் ஒருவரையே நாம் சுட்டலாம். அடுத்து, காமராசர் ஒருவரையே நாம் சுட்டமுடியும். இவர்கள் இருவரும் பொதுமக்கள் மேல் வைத்த பேரன்பைப் போல், அவர்களைப்பற்றி இவர்கள் கொண்ட கவலையைப்போல், வேறெவரும் அன்பு வைத்ததாகவோ, கவலைப்பட்டதாகவோ, அல்லது படுவதாகவோ நாம் கருதமுடியவில்லை. இதனை நாம் எவ்வகையான விருப்பு வெறுப்பு இன்றியும், மதர்மதர்ப்பில்லாத நடுநிலை உணர்வுடனும், கவலையுடனுமே சுட்டுகிறோம். மற்றபடி தனிப்பட்ட எவர் மீதும் நமக்கு வெறுப்போ - விருப்போ - காழ்ப்போ என்றுமே ஏற்பட்டதில்லை. நம்மைக் கடுமையாகப் பகைப்பவர்களை அல்லது வெறுப்பவர்களைக்கூட, நாம் அவர்கள் பிழைகளையும், தவறான போக்குகளையும், சிலரிடத்து அவர்களின் இழிவான நோக்கங்களையும், தேவையான முறையில், தேவையான காலத்தில், தேவையான அளவில் வெளிப்படையாகச் சுட்ட வேண்டிய ஓரிரண்டு இடங்கள் தவிர, மற்றவிடத்து மறைமுகமாகவே, மொழி, இன, நாட்டு நலம் கருதிச் சுட்டியிருக்கிறோம்; சுட்டி வருகிறோம். ஆனால் அதற்காக, ஒருவரின் அறிவுத் தகுதியையோ, பண்புத் தகுதியையோ, செயல் தகுதியையோ, இன்னும் சொல்வதானால் அவர்களிடம் உள்ள சில தலைமைத் தகுதிப்பாடுகளையேகூட என்றும், எவ்விடத்தும், எவ்வகையிலும் குறைத்தே மதிப்பிட்டதில்லை. இதனை நம் எழுத்தையும், உரையையும், செயல்களையும் நன்குணர்ந்தவர்கள் தெளிவாக அறிவர். பொதுவாகவே, தமிழினம் இன்னும் கன்னைப் பொது உணர்வுக்கும், மொழி, இன நாட்டு உரிமை உணர்வுகளுக்கும் தகுதிப்படுத்திக் கொள்ளவே இல்லை. தமிழினத்தில் உள்ள பெரும்பாலார்க்கு ஒரு கும்பல் உணர்வே உள்ளது. நாம் எதற்காக ஒன்றுபடவேண்டும்? ஒன்றுபடுவதென்றால் என்ன? எப்படி? என்கின்ற விளக்கவுணர்வுகள், நம்மில் நூற்றுக்கு முப்பது பேர்களுக்காகிலும் ஏற்பட்டிருக்கும் என்று கருத முடியவில்லை . நமக்கிருப்பது ஒரு கூட்டவுணர்வே. தெருவில் வேடிக்கை காட்டும் இடத்தில் போவோர் வருவோர் ஒருநொடிப் பொழுதில் கூடி, மறுநொடிப் பொழுதில்