பக்கம்:தமிழின எழுச்சி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 171


குற்றம் வேறு; தவறு வேறு; பிழை வேறு. பிழை இயல்பாக நேர்வது; தவறு நாம் உணராமல்-அறியாமல் செய்வது; குற்றம்தாம் உணர்ந்து, அறிந்தே செய்வது. பிழை மறக்கக் கூடியது; தவறு மன்னிக்கக் கூடியது; குற்றம் தண்டிக்கக்கூடியது. மேலும் பிழை நேராமல் இருப்பதற்கு விழிப்புணர்வு தேவை; தவறு நேராமல் இருப்பதற்கு எச்சரிக்கை தேவை; குற்றம் நேராமல் இருப்பதற்கு பாதுகாப்பு தேவை. பிழையும் தவறும் குற்றம் ஆகா. நம்மில் நூற்றுக்கு நூறு பேர் பிழைகள் செய்கிறோம், நூற்றுக்கு எண்பதுபேர் தவறுகள் செய்கிறோம்; நூற்றுக்கு அறுபது பேர் குற்றங்கள் செய்கிறோம். இந்த அறுபது பேரில் நாற்பது பேர் தண்டனைபெற்ற பின்னும், மீண்டும் குற்றம் செய்கிறோம். நாற்பது பேரில் இருபத்தைந்துபேர் குற்றங்களையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறோம். இறுதி இருபத்தைந்தில், ஐந்து பேர் குற்றங்கள் செய்வதுமன்றிக் கொடுமையாகவும் அவற்றைச் செய்பவர்களாக இருக்கின்றார்கள். நம் குமுகாய அமைப்பு அப்படி.

இந்த நிலையில், நாம் நம்முடைய மனவுணர்வுகளையும், அறிவுத் திறம்பல்களையும், செயல் திருட்டுகளையும் மறைத்துக்கொண்டு, பிறரையே நாள் முழுவதும், காலம் முழுவதும் எடைபோட்டு, அவரவர்களின் பிழைகளையே தவறுகளாகவும், தவறுகளையே குற்றங்களாகவும், குற்றங்களையே கொடுமைகளாகவும் பன்னிப்பன்னிப் பேசிக்கொண்டு திரிகிறோம். இதனால், பிழை செய்யாதவன் பிழை செய்யும்படி தூண்டப்படுகிறான்; பிழை செய்பவன் தவறு செய்யும் வழியை நாடுகிறான்; தவறு செய்பவன் குற்றம் செய்யக் கட்டாயப் படுத்தப்பெறுகிறான்; குற்றம் செய்பவன் கொடுமையாளனாக மாற்றப்பெறுகிறான்; கொடுமை செய்பவன் கொலைகாரனாக உரம் பெறுகிறான். குமுகாய மனவியல்படி, சிறு சிறு பிழைகளும், தவறுகளும் பெரும்பெரும் குற்றங்களாகவும், கொடுமைகளாகவும், கொலைகளாகவும் இவ்வாறுதாம் மாற்றம் பெறுகின்றன என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

குற்றம் கூறும் மனவுணர்வு, ஆசையாகத் தோன்றி, அவாவாக வளர்ந்து, பேராசையாக உருமாறிப் பொறாமையாக உரம்பெற்றுக் காழ்ப்பாகக் காழ்த்துக் கொடுமையான விளைவுகளைச் செய்கிறது. பிறரைக் குற்றமே கூறுகிறவன், நாளடைவில் அதைக் கவர்ச்சியாக வடிவப் படுத்துகிறான்; அதற்குப் பொய்யையும் புளுகையும் கலந்து மினுக்கேற்றுகிறான்; அச்செயல் வெற்றிபெறும் பொழுது அதையே தொடர்ந்து செய்து, வழக்கமாக்கிக் கொள்கிறான்; பிறகு அந்த வழக்கத்தையே வாழ்க்கையாக்கிக்கொண்டு, நடமாடும் நச்சு மரமாக உயிர்