பக்கம்:தமிழின எழுச்சி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

174 • தமிழின எழுச்சி

பற்றுவதே பொதுவுணர்வுக் களத்தில்தான் என்பதாலும், அந்த இழிவான குமுகாயக் கேடான மனவுணர்வு வளர்ச்சியாலேயே நம் தமிழினத்தில் பலவேறு மனப்பிளவுகளும், கொள்கைப் பிளவுகளும் உருவாகி வளர்ந்து, இவ்வினத்துக்குத் தொண்டு செய்ய வருபவர்களையே ஒன்றுசேரவிடாமல் செய்வதாலுமே, இவ்வுணர்வு பற்றி இவ்வளவு விரிவாகவும் விளக்கமாகவும் கூறவேண்டி வந்ததென்க. நம் தமிழிலும், தமிழர்களிடையிலும் இவ்வுணர்வு மிகுந்திருப்பதால்தான், வேறு எந்த இனத்தின் மொழியின்-அறநூல்களிலும் கூறப்பெறாத அளவிலும், கடுமையான சொற்களிலும் இக் குமுகாயக் குற்றம் திருவள்ளுவர் என்னும் தமிழின நலம் விரும்பிய பெரும் பேராசானால் சுட்டிக் காட்டி உரைக்கப்பெற்றது என்க. மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இக்குமுகாய மனவுணர்வால் ஏற்படும் இனநலப் படிநிலை வளர்ச்சித்தாக்கம் விளங்காது. ஆனால் ஆழ்ந்து பார்ப்பவர் களுக்கு இது புலனாகாமல் போகாது. இந்தக் கீழ்மையான உணர்வு தான் நம்மில் ஒருவர்க்கொருவர் மேல் அவநம்பிக்கையை உண்டாக்கி, இருக்கிற ஒற்றுமையைச் சிதைப்பதுடன், மேலும் ஒன்றுதல் ஏற்படாமலும் செய்து வருகிறது. ஒற்றுமைக்கு நம்பிக்கையே தேவையான அடிப்படை உணர்வாகும் என்று அறிந்துகொள்க. இதுபற்றி இன்னும் கொஞ்சம் விளக்குவோம்.

தலைமை என்பது பல படிநிலைகள் உடையது; பல கூறுகளையும் கொண்டது. பொதுவாகவும் அதேபொழுது சிறப்பாகவும் சொல்ல வேண்டுமானால், நல்ல தலைமை என்பது நல்ல தொண்டே. அதே போல் நல்ல தொண்டு என்பதும் நல்ல தலைமையே ஆகும். தொண்டும், தலைமையும் வேறுபட்டு எங்கும் இயங்கா. நல்ல தொண்டராக இல்லாமல் நல்ல தலைவராக இருக்க முடியாது. உலகத்துத் தலைவர்களெல்லாம் நல்ல தொண்டர்களாக இருந்தவர்களே! பிறவிப் பாவலர், பிறவிக் கலைஞர், பிறவிச் செல்வர், பிறவி-மேதை என்பதுபோல் பிறவித் தலைமை என்பது எங்கும் எதிலும் கிடையாது. எழுத்தைக் கற்றுக் கொள்ளாமல் எவ்வாறு படிக்கவோ எழுதவோ முடியாதோ, அவ்வாறே நல்ல தொண்டராக உருவாகாமல் நல்ல தலைவராக ஆகவே முடியாது.

தலைமை என்பது ஆசிரியத் தன்மை மட்டுமன்று; மாணவத் தன்மையும் ஆகும். ஆசிரியனும், மாணவனும் போலவே, தலைவனும், தொண்டனும் ஊசியும், நூலும் போன்றவர்கள். (ஊசி நுழையும் போதெல்லாம் கூடவே நூலும் நுழைகிறது.) எனவே, நல்ல தூய்மையான தொண்டு வளர்ச்சியே நல்ல தலைமையை உருவாக்க முடியும். இங்கு, குறிப்பாகத் தமிழர்களிடையே நல்ல தலைவர் இல்லை