பக்கம்:தமிழின எழுச்சி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

176 • தமிழின எழுச்சி

பாடுபடவேண்டும். அது தொளாயிரத்து தொண்ணூறு படியாக விளைகிறதென்று வைத்துக் கொண்டால், மீண்டும் நம் தேவைக்கு என அதில் நாம் ஒருபடி நெல்லையே எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றதை மீண்டும் விதைத்து மேலும் ஒன்றுக்குப்பத்தாகவோ, நூறாகவோ பெருக்க நாம் உழைக்க வேண்டும் அப்பொழுதும் நாம் நம் தேவைக்கென ஒவ்வொரு படி நெல்லையே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆயிரம் படி விளைகிறதென்று, நம் தேவைக்கு மீறி எதையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. அந்த அளவு மனப்பான்மைதான் தொண்டுக்கும் தேவையானது; தலைமைக்கும் தேவையானது. உடைமை வளர வளர, நம் தேவைகளையும் கூட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அப்பொழுது தான் நம் தொண்டுக்கு அவை முழுவதும் பயன்படுத்தப் பெற்று, நம் தொண்டு சிறக்கும்; அதன் பரப்பும் வளரும். இல்லெனில் நாம் தாம் சிறப்போம்; தொண்டு சிறவாது. இந்தத் தேவை அளவீடு நம் குடும்ப நிலையிலும் மீறக்கூடாது. இதில் ஒருபடி நெல் என்பது ஒரு குறியீடே யொழிய, சட்டமன்று, தேவைக்கு இரண்டு படி வேண்டும் என்றால் அதை எடுத்துக் கொள்வதில் பிழையில்லை; தவறுமில்லை.

'தொண்டு' என்னும் சொல், உழவு அடிப்படையில் தோன்றிய சொல்லாக இருப்பினும், அஃது உழைப்பையே குறிக்கும். பெரும்பாலும் நம் முதிய மொழியாகிய தமிழில் உள்ள, செயல், வினை, தொண்டு, தொழில் முதலிய அனைத்துச் சொற்களும் உழவு அடிப்படையில் தோன்றிய சொற்களே! வேலை என்பது போர் அடிப்படையில் (வேல் மூலம்) தோன்றிய சொல். 'கருமம்' என்பது உழவுக்கு வேண்டிய கருவித்தொழில் அடிப்படையில் தோன்றிய சொல்லாகும். இந்தச் சொற்களைக் கொண்டே தமிழினத்தின் தொன்மையையும், நாகரிகத்தையும் பண்பாட்டையும் வரையறுக்கலாம். ஆனால், அவை பற்றியெல்லாம் இங்கு விளக்கத் தேவையில்லை. அவை வேறுவேறு இடங்களில் விளக்கப் பெற்றுள்ளன.

இக்கால், நமக்குத் தேவையான 'தொண்டு' என்னும் சொல், தன்னலமற்ற உழைப்பையே குறிப்பது என்ற ஒரு பொருளை மட்டும் நாம் தெரிந்து கொண்டால் போதும். அதுவும் அது வேளாண்மை போன்ற உழைப்பையே சிறப்பாகக் குறிக்கும். அதன் பொருட்டாகத்தான் நாம் உழவையும் விதைநெல்லையும் உவமையாக, எடுத்துக்காட்டாக இங்குக் கூறவேண்டி வந்தது. தொண்டன் உழவனைப் போன்றவன். மனத்தை உழுது பக்குவப்படுத்திப், பயனை விளை விப்பவனைச் 'சொல்லேர் உழவன்' என்றும் திருவள்ளுவர் அவனைப் பாராட்டினார், சொல்லேர் உழவன் என்னும் இணைச்சொல், சொல்வதில் அஃதாவது கருத்துகளைப் பேசுவதில் மட்டும் கெட்டிக்காரன்