பக்கம்:தமிழின எழுச்சி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் . 177

என்று பொருள் தருவதாகக் கருதிக் கொள்ளக்கூடாது! சொல்வதைக் கொண்டு செயலாலும் உழைப்பவன்' என்று பொருள் தருவது, அந்தச் சொல்,

செயலுக்கு அடிப்படை சொல், சொல் செயலாக விளைய, நாம் சொல்லும் சொல் கருத்து நிறைந்ததாகவும் இருத்தல் வேண்டும் நெல் எவ்வாறு சாவியாகவோ, பதராகவோ இருந்தால் விளையாதோ, அவ்வாறு சொல்லும் கருத்தற்றதாகவோ, பதரைப் போல் புன்மை உடையதாகவோ இருப்பின் விளைவு வராது. அதனால்தான் “சொல்" என்னும் சொல்லுக்கே தமிழில் 'நெல்' என்று ஒரு பொருள் (தமிழில் மட்டுமே) உண்டு. (அகர முதலியைப் பார்க்கவும்) சொல், சொன், சொன்றி, சொறு, சோறு என்பன பல சொல் ஒரு பொருள். சொல், விதை நெல்போல் இருத்தல் வேண்டும். அதேபோல் நெல்லும் சொல்போல் கருவுடையதாக இருத்தல் வேண்டும். அதனால்தான் சொல்லை நெல்லென்றும் பொருள் கொண்டார், தமிழர்.

மக்கள் மனங்களை உழுது, சொற்களை விதைத்து நல்ல செயல்களை விளைவுகளை உண்டாக்குபவர்களே நல்ல தொண்டர்கள். தொண்டர்கள் எல்லாருமே நல்ல கருத்துடன் பேசத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். என்பதில்லை நல்ல கருத்துகளை மக்களிடம் மனங்கொள்ளுமாறு கூறி, அவர்களைச் செயல் உடையவர்களாக மாற்றி, அச் செயல்களால் அவர்களுக்கு நல்ல விளைவுகளைப் பயன்களைக் கிடைக்குமாறு செய்வதே பொதுநலத் தொண்டுக்கு இலக்கணம் ஆகும். இத்திறத்தில் உழைப்பவர்களே முதல்நிலைத் தொண்டர்களாக இருக்க முடியும்.

ஆனால், நம்மில் சிலர் பேசத் தெரிந்தவர்களாக இருக்க மாட்டார்கள்; செய்யத் தெரிந்தவர்களாக இருப்பர். அவர்கள் விளைவுக்குரியவர்கள் என்னும் பெருமையைப் பெற்ற இரண்டாம் நிலைத்தொண்டர்கள். இனி, பேசவும் தெரியாமல், செய்யவும் தெரியாமல், அஃதாவது எதையும் தாமே வகுத்துக்கொண்டு திட்டமிட்டுச் செய்யத் தெரியாமல், சொல்வதை மட்டுமே-அஃதாவது பிறர் வகுத்துத் திட்டமிட்டுக் கொடுத்தால் மட்டுமே இயங்கக் கூடியவர்களாக (நன்றாகக் கவனிக்கவும் ஏவினால் இயங்கக் கூடியவர்களாக) மட்டுமே இருப்பார்கள். அவர்கள் மூன்றாம் நிலைத்தொண்டர்கள் வரிசையைப் பெற்றவர்கள்.

தொண்டு நிலையில் இந்தப் படிநிலைப் பாகுபாடுகள், எவரும் எவர் தோளாகவும், கையாகவும், கால்போலும் பிற உறுப்புகளாகவும் இருந்து இயங்கவேண்டாம் என்னும் அடிப்படையில் பகுத்துக் கூறப்பெற்றதே தவிர, அவர்களின் தகுதி நிலையில் உயர்தாழ்வு அடிப்-