பக்கம்:தமிழின எழுச்சி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

178 - தமிழின எழுச்சி

படையில் அன்று என்று கருதிக் கொள்ளுதல் வேண்டும். அதற்குத்தான் முன்னரே கூறினோம், தலைவர் என்பவர் தொண்டர் என்பவரை விடத் தொண்டு நிலையில் - அஃதாவது செயல் நிலையில் முகாமையான ஓர் உறுப்பாண்மை பெற்றவரே தவிர, தகுதி நிலையில் தொண்டருக்குச் சமமானவரே. எவ்வகையாலும் உயர்ந்த மாந்தத் தகுதி உடைய உயர்ந்த பிறப்பினரல்லர் என்பதை உறுதியாக எண்ணிப்பார்க்க வேண்டும். ஏனெனில், இவ்வகையான வேறுபாடுகளால்தாம், நமக்குள் போட்டி, பொறாமைகள், பூசல்கள், உள்ளரிப்புகள், உட்பகைகள் இரண்டகங்கள், வஞ்சகங்கள், புறப்பகைகள், ஏசல் பேசல்கள், இழிவுகள், பழிகள், ஒத் துழையாமைகள், வம்பு வழக்குகள், சண்டை சழக்குகள், குத்து வெட்டுகள், கொலைகள், சீரழிவுகள், பல்வேறு பிளவுகள் முதலியவை ஏற்பட்டு, நம்மையே ஒற்றுமை யற்றவர்களாகவும், உருப்படியாகா தவர்களாகவும் செய்து வருகின்றன என்பதை நாம் ஓர்தல் வேண்டும்.

தொண்டுள்ளம் என்பது, இயற்கையாகவே அமைய வேண்டிய ஓர் உணர்வுள்ளம். கலைஞர்க்கு எவ்வாறு கலையுணர்வும், வீரர்க்கு எவ்வாறு வீரவுணர்வும், துறவிக்கு எவ்வாறு பற்றற்ற துறவுள்ளமும் அமைந்திருக்கின்றனவோ, அவ்வாறே உண்மையான தொண்டர்க்குத் தொண்டுணர்வும் இயற்கையாகவே அமைந்திருத்தல் வேண்டும் உண்மையான தொண்டுணர்வு என்பதை அடையாளம் காணுதல் அரிது. போலிக் கலைஞரைப் போலவும், போலி வீரரைப் போலவும், போலித்துறவியைப் போலவும் போலித் தொண்டரும் உண்மைத் தொண்டரைப் போலவே காட்சியளிப்பர்; பேசுவர்; இயங்குவர். ஆனால், அவருக்கு அத்தொண்டால், ஏதாவது ஓர் இடர்ப்பாடு நேரிடுகையில், தடை வருகையில், இழப்பு நேர்கையில், இதைவிட வேறுவகையில் ஊதியம் வருகையில், தாம் மேற்கொண்ட அத்தொண்டுப் பணியைக் கைவிட்டு விடுவார். அந்நிலையில்தான் போலித்தொண்டரை அடையாளங் காணஇயலும்.

எனவே, உண்மைத் தொண்டர்க்கு இன்றியமையாத கீழ்வரும் பதினான்கு குணங்கள் கட்டாயம் தேவை. இவற்றுள் ஒன்று குறை யினும், தொண்டின் முழுமை உணர்வில் குறைவுற்றவராகவே கருதுதல் வேண்டும். பதினான்கும் நிறைவாக வாய்க்கப் பெற்றவர்களே மிகச்சிறந்த தொண்டர்களாகவும், அவர்களுள்ளும் முதிர்வுற்றவர்களே தலைவர்களாகவும் இருக்கத் தகுதி பெற்றவர்களாவார்கள்.

தொண்டுக்கான தகுதிநிலைகள்

1. மிக ஆய்ந்து, பொது நலத்துக்கெனத் தாம் சிறந்ததெனத் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஒரு கொள்கையை, எந்த நிலையிலும், எவ்விடத்தும், எக்காலத்தும், எந்த ஒரு மாற்றுக் கொள்கைக்காகவும்,