பக்கம்:தமிழின எழுச்சி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 181

கொண்டு தொண்டு தொடங்கப் பெற்றுப் படிப்படியாகக் குறையுள்ள வர்களை நிறையுள்ளவர்களாக வளர்த்தெடுக்கத்தான் வேண்டும். வேறு, வழியில்லை.

அரசியலாயின், ஊதியம் கருதும் தொண்டர்கள் நிறையப் பேர் வருவர். பிற, மொழி, இன, நாட்டு நலத்தொண்டு இழப்பும், இடர்பாடும், ஏதங்களும் மிகுந்ததாகையால், அத் தொண்டுக்கென வருவார் தொகை மிக மிகக் குறைவாகவே இருக்கலாம். வந்த அளவில் தொண்டு விளைவும் அந்த அளவிலே இருக்கும் என்பது வெள்ளிடை மலை. ஆனால், ஒரு தொண்டியக்கத்தைக் கட்டமைத்தவர் தாம் தம்பால் வரும் தொண்டர்களைப் பற்றி மிக எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும் இல்லெனில் வருகின்ற தொண்டர்களால் கொள்கைச் சிதைவும், இடர்ப்பாடும், மனத்துயரும், இழுக்குகளும், பழிகளும், பூசல்களும், இழப்புகளுந்தாம் எஞ்சும். நம் முப்பத்தைந்தாண்டுகாலத் தொண்டுப் பணியின் பட்டறிவு இது. நம் நாட்டு மொழி, இன, நாட்டு நலத் தொண்டுக்கும், தொண்டர்களுக்கும் வெற்றி கிட்டாமைக்குரிய காரணமும் இது தான்.

இனி, இறுதியாகப் பொதுத் தொண்டுக்குத் தடையாயிருக்கும் சில கூறுகளைப் பற்றியும் நாம் எண்ணிப் பார்த்து, அத் தடைகளை அகற்றிக் கொள்ளவும், அல்லது புறக்கணிக்கவும், அல்லது பொருட்படுத்தாமல் இருக்கவும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

பொதுவாக நம் நாட்டைப் பொறுத்த வரையில் பொதுத் தொண்டுக்கு முதல் தடையாயிருப்பது நம் குடும்பங்களே! திருமணம் ஆகாத இளைஞர்களாக இருப்பின், அவர்களின் பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், சுற்றத்தார்கள் முதலியவர்களும், திருமணம் ஆனவர்களாக இருப்பின், அவர்களுக்குத் துணையாக வந்து வாய்த்தவர்களும் அவர்களின் பிள்ளைகளுமே முதல் தடைகள். இதுபற்றி இக்கட்டுரையின் முன்பகுதியில் ஓரளவு கூறப் பெற்றிருப்பினும், இங்கு இன்னும் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. நாம் கண்ட அளவில், திருமணம் ஆகாத முன்பு, நல்ல பொதுவுணர்வும், தொண்டுள்ளமும் வாய்க்கப் பெற்றவர்கள் திருமணம் ஆன பின்பு, தம் தொண்டு நிலையில் பல படிகள் தாழ்ந்து விடுகின்றனர்; அல்லது மாறி விடுகின்றனர். எச்சம் சொச்சம் இருக்கும் சில பொதுவுணர்வுக் கூறுகளும், அவர்களுக்கு ஓரிரு குழந்தைகள் பிறந்த பின்னர் அறவே பொதுநிலையிலிருந்து கழன்று விடுகின்றன. இந்நிலை நம் நாட்டில், குறிப்பாகத் தமிழினத்தைப் பொறுத்தவரையில் நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து இளைஞர்களிடம் காணப்படுவதாகும். மீதி