பக்கம்:தமிழின எழுச்சி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 
இனநலம் ஏமாப்பு உடைத்து!


கழக இலக்கியங்களில், திருக்குறளில்தான் 'இனநலம்' பற்றி அதிகம் பேசப் பெறுகிறது. அதுவுமன்றிக் குடிநலம் பற்றியும் அது காக்க வேண்டிய இன்றியமையாமை பற்றியும், காக்க வேண்டிய முறை பற்றியும்கூட நிறைய எடுத்துரைக்கப் பெறுகின்றது. இதில் 'இனம்' என்பது, 'குடி' என்பதும் தமிழினத்தையும், தமிழ்க்குடியையுமே குறிக்கின்றன என்பதைப் பலர் அறியார். உலகப்பொதுமை என்று கூறிக் கொண்டு, திருக்குறளில் உள்ள கருத்துகள் தங்கள் இனத்துக்கோ, குலத்துக்கோ மட்டும் கூறப்பெற்ற கருத்துகள் அல்ல, எல்லா மக்களுக்கும் பொதுவாகவே கூறப்பெற்ற கருத்துகளே என்று கூறி வருகின்றவையெல்லாம் ஒரு போலியான கருத்துரையே தவிர, உண்மையானதோ, முழுமையானதோ அல்ல. இவ்வகையான சிந்தனை அடிப்படையில் பார்க்கும் பொழுது, பிற இலக்கியங்களில் கூறப்பெறாத இனநலம், குடிநலம் என்னும் சொற்கள், திருக்குறளில் மட்டும் மிகுதியான அளவில் ஏன் கூறப் பெற்றிருக்க வேண்டும் என்ற வினாவெழுப்புதலும் அதற்கு விடைகாண முற்படுதலும் தவிர்க்க முடியாதவையாகி விடுகின்றன.

இனி, வெறுமனே இனநலம், குடிநலம் என்று மட்டுமே கூறப் பெறாமல், திருவள்ளுவர் பரவலான இடங்களில் இனநலக் காப்புக்கு வழி செய்யும் வகையிலும், குடிநலம் பேணப் பெறுதல் வேண்டும் என்ற வகையிலும் பல்வேறு வகையான கருத்துகளைக் கூறுவதை மிக ஆழமாகவும் அகலமாகவும் காணலாம். இதிலிருந்தே திருக்குறள் ஓர் இனநலக் காப்பு நூல் என்பதை முதன்முதலாக நாம் தெரிந்து கூற-