பக்கம்:தமிழின எழுச்சி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

18 - தமிழின எழுச்சி

பெயரால் தமிழைக் கெடுக்கும் கோடரிக் காம்புகளை எக்காரணம்பற்றியும் போற்றுதல் கூடாது. 5. புது முறைக் கலைகளையும், அறிவியல் ஆக்கங்களையும் அவ்வப்பொழுது பெயர்த்தும் விளக்கியும் ஆங்காங்குள்ள மாணவர்க்கும், அறியா மக்கட்கும் அறிவுணர்வும் தமிழுணர்வும் கூட்டுதல் வேண்டும். 6. தனித் தமிழ்க்குக் கேடுசெய்யும் செய்தித் தாள்களையும் இலக்கிய, கலை இதழ்களையும் அறவே புறக்கணிக்கவேண்டும். அவ்வாறு அவ்விதழ்கள் புறக்கணிக்கப் பெறின் அவை தாமே காலப்போக்கில் மாறுபாடடைந்து வருதல் உறுதி என்றறிதல் வேண்டும். 7. தமிழாய்ந்த தமிழ்ப் பெரும் புலவர்களையும் தமிழ் மாணவர் களையும் புரந்து காத்தல் வேண்டும். தனியொருவர் செய்யவியலாக் காலத்துப் பலருங் கூடியோ, தமிழ் மன்றங்கள் வழியோ அன்னார்க்குப் பொருளுதவி செய்தல் வேண்டும். தமிழ்ப் புரவலர்கள் குன்றியமையே, தமிழ்ப் புலவர்களும் அறிஞர்களும் ஊக்கங் குறைந்து மனம் வெதும்பிப் போனமைக்குக் காரணம் என்றும், அங்ஙன் அவர் நிலை குன்றியதே தமிழுக்கும் தமிழகத்திற்கும் பகைவரால் கேடுவரப் பொருட்டாயமைந்தது என்றும் கருத்திற் கொள்ளல் வேண்டும். 8. தமிழ்க்கும் தமிழறிஞர்க்கும் உதவி செய்ய முன்வருங்கால் போலியறிவுற்ற மேம்போக்கான பிழைப்புத் தமிழ்ப் பற்றாளரை இனங்கண்டு விலக்கி, உண்மைப் புலவர்களையே புரந்து போற்றல் வேண்டும். 9. தமிழர் தம்மக்கட்குப் பிள்ளைமைப் பருவத்திருந்து தமிழறிவும் ஆங்கில அறிவும் ஊட்டுதல் இன்றியமையாக் கடன் ஆகும். 10. எத்துறை அலுவலில் இருப்போராயினும் முத்தமிழ்ப்பற்றும் உணர்வும் இல்லாதவரை மதியாது புறக்கணிப்புச் செய்தல் வேண்டும். 11. தமிழ் இன்றேல் தமிழரும் இலர் என்றும், தமிழர் இன்றேல் தமிழ் நாடும் தமிழ்ப் பண்பாடும் அறவே இல்லை என்றும் உறுதியாக எண்ணிக் கொள்ளல் வேண்டும்.

தென்மொழி சுவடி - 1, ஓலை - 6 சூலை - 1963