பக்கம்:தமிழின எழுச்சி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 189

இனத்திற்கென்று சிறப்பியல்புகளாகத் தேடி வைத்துக் கொண்ட பிற அனைத்தும் அழிந்து போகும் காக்கவியலாமல் போகும் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள முடியும். கொள்ளவே நாம் நம் இனமழியாமல் காக்க என்ன செய்ய வேண்டும், என்பதையும் நாம் விளங்கிக் கொண்டவர்களாக ஆவோம்.

இறுதியாக நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டும். நாம் நமக்குள்ள பிற அனைத்துச் சிறப்பியல்களையும், அவற்றின் பழமை, முதுமை, தனிமை, இனிமைப் பெருமைகளையும் பேசிக் கொண்டிருந்தால் போதாது. அவற்றை அழியாமல் காக்கவும், அவற்றைத் தொடர்ந்து நம் இனத்துக்கு வலிவான உடைமைகளாக நாம் நிலைப் படுத்தவும் எண்ணினால், விரும்பினால், முதலில் நம்மிடையில் உள்ள வேறுபாடுகளை உடனடியாகப் புறந்தள்ளிவிட்டுக் களைந்துவிட்டு, நாம் நம் தமிழினத்தின் நலனை-வலிவை- ஒற்றுமையை ஒருமுக உணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இனவலிவுதான் பொருளி யல் உள்பட நம்மிடமுள்ள அனைத்தையும் காக்க முடியும் என்று உறுதியாக நம்புங்கள். நம்பாதவர்கள் ஈழத்தில் இப்பொழுது நடக்கும் கொடுமையையும், இனி, எதிர்காலத்தில் இத் தமிழ்நாட்டுத் தமிழர்க்கும் நடக்கப் போகும் சிதைவையும் ஆழமாக எண்ணிப் பார்த்துத் தங்களைத் தெளிவித்துக் கொண்டு செயலில் இறங்குவதே நம் கடமையும், கட்டளையும் ஆகும் என்பதை உறுதியாகவும் இறுதியாகவும் எண்ணிக் கடைப்பிடிக்க வேண்டிக்கொள்கிறோம்.


தென்மொழி சுவடி-23, ஓலை 2, சன-பெப்-1987