பக்கம்:தமிழின எழுச்சி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் . 193

முழுவதும் அரசியல் கூறுகளையே உள்ளடக்கியதாகவே கூறப் பெற்றிருப்பினும், இந்த உட்பகை என்னும் அதிகாரத்தில் கூறப் பெறும் கருத்துகளுக்கும், அரசியலுக்கும் அத்துணைப் பொருத்தம் இருப்பதாக நாம் கருத முடியாது. உட்பகை என்னும் சொல், அரசனுக்குள்ள உட்பகைவர்களைக் குறிப்பதாகக் கொள்ளலாமேனும், இவ்வதிகாரக் கருத்துகளைப் பார்க்கும்பொழுது, அந்தக் கோட்பாட்டிற்கு, இவ்வதிகாரக் கருத்துகள் துணை செய்வனவாக யாரும் கூறிவிட முடியாது. மாறாக, இவை ஒரு குடிமக்களுக்குள் அஃதாவது ஓர் இனத்திற்குள், அதன் முன்னேற்றத்திற்குத் தடையாக நிற்கும் உட்பகைவர்கள், இரண்டகர்கள், மாற்றினத்திற்கு அடிமைப் பட்டுப்போய்த் தன் இனத்தின் முன்னேற்றத்திற்குக் கேடாக நிற்கும் வஞ்சகர்களைப்பற்றி விளக்கமாகக் கூறும் கருத்துகளாகவே இருப்பதை, இவ்வதிகாரத்தை மேலோட்டமாகவன்றி, ஆழமாகப் பார்ப்பவர்கள் நன்கு விளங்கிக் கொள்ளலாம்.

இப்படிப் பட்ட ஒரு குடியைத் திருவள்ளுவர் எங்குப் பார்த்தார்? எவருக்காகச் சொன்னார்? அல்லது சொல்லியிருக்க வேண்டும்? அமெரிக்காவிலோ, ஆத்திரேலியாவிலோ, அல்லது ஐரோப்பாவிலோ, ஆப்பிரிக்காவிலோ உள்ள குடிமக்களைப் பார்த்தா, இக் கருத்துகளை அவர் கூறியிருக்க முடியும்? இல்லையில்லை. திருவள்ளுவப் பேராசானுக்கு அக்கண்டங்கள் தெரிந்திருக்கவும் இல்லை; அங்குள்ள மக்கள் பிளவுபட்டு விளங்கியிருந்ததாகக் கண்டிருக்கவும் முடியாது. முழுக்க முழுக்க நம் தமிழ்க்குடி மக்களை நோக்கியேக் கூறியனவாகும். அவர்கள் சேரன் ஆட்சியில் இருந்திருக்கலாம்; சோழன் ஆட்சியில் வாழ்ந்து கொண்டிருந்திருக்கலாம்; அல்லது பாண்டிய நாட்டில் இருந்திருக்கலாம். எப்படியும் அத் தமிழ் மக்களிடம் உட்பகை தோன்றியிருந்து, அவர்களைப் பல்வேறு கூறுகள் உடையவர்களாகப் பிரித்திருக்கலாம். அவ்வாறு பிரிவு-பிளவு-பட்டதன் வழி அவர்களுக்குள்ள ஒற்றுமை குறைந்து வலிவு மெலிவாகி, வாழ்வியல் முன்னேற்றங்கள் சீர்குலைந்திருக்கலாம்; அல்லது சீர்குலையத் தொடங்கியிருக்கலாம், அந்த உட்பகை புறப்பகையின் ஊடுருவலால், அல்லது தூண்டுதலால் தோன்றி யிருக்கலாம். எப்படியோ இவ்வாறான ஒரு விரும்பத்தகாத, அல்லது இயற்கைக்கு மாறான ஓர் இனத் தாக்கம் இத்தமிழினத்தில் திருவள்ளுவர் காலத்தில் தோன்றியிருக்கலாம்; அல்லது தோன்றி வளர்ந்து வந்திருக்கலாம். இந்த விளைவு நம் தமிழின வரலாற்றில் உறுதிப்படுத்தப் படுவதையும், நம் வரலாற்று நூல்களையும், இலக்கியங்களையும் ஒப்ப வைத்து ஆய்ந்து பார்க்கையில் நாம் உணர முடிகிறது. அப்பட்டமாக அக்கால் நேர்ந்த உண்மைகளைத்