பக்கம்:தமிழின எழுச்சி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

கலைஞர் முன்னுள்ள முப்பெரும் பணிகள்!


தமிழக முதல்வர் கலைஞர் அருட்செல்வனாரின் (கருணாநிதியின்) வலிவுகளை நாம் நன்கு அறிவோம். ஏன், உலகத் தமிழர் அனைவருமே நன்கு அறிவர். ஆனால், அவரின் மெலிவுகளை அவர்தாம் அறிவார். அரசியலில் ஒருவரின் வலிவுகள் எவ்வளவு முகாமையானவையோ அவ்வளவு முகாமையானவை அவரின் மெலிவுகளும். ஒருவரின் பொதுவாழ்க்கையினது வெற்றிக்கும் தோல்விக்கும் இவ்வலிவுகளும் மெலிவுகளும் காரணங்களாக அமைகின்றன. 'ஒருவரின் பொது வாழ்வு வானின்று இயங்கும் முழுநிலவைப் போன்றதாயின், அதிலுள்ள ஒளியைப் போன்றது அவரின் வலிவு; அதிலுள்ள கறையைப் போன்றது அவரின் மெலிவு; என்பார் திருவள்ளுவர் - (957).

எஃது எவ்வாறாயினும், கலைஞரின் தமிழ்ப்பற்றையும், தமிழின மேம்பாட்டு நோக்கத்தையும் தமிழ்நாட்டு நலன் நோக்கிய செயற்பாடுகளையும் எவரும் ஐயுறவோ, குறைகூறவோ முடியாது. இருப்பினும் இம்மூவகைச் செயற்பாடுகளையும் அவர் நெகிழ்ச்சியில்லாமல் மேற்கொள்ளவும் வினைமுடிக்கவும் வேண்டுமாயின். அவரின் வலிவுகளைவிட மெலிவுகளிலேயே மிக கவனமும் மிகு எச்சரிக்கையும் செலுத்துதல் வேண்டும். ஏனெனில் ஒருவரின் மெலிவுகள் அவரின் முழு வலிமையையும் மிகு துணிவையும் தகர்த்துவிடக் கூடியவை. கலைஞரின் மெலிவுகள் அவரின் வலிவுகளைக் குறைவுபடுத்தி விடாமல் அவரைக் கோழையாக்கிவிடாமல் இருக்கவேண்டும் என்பதில் நாம் மிகுவிருப்பம் கொள்கிறோம். அவ்வாறு நேர்ந்துவிடக்கூடாது என்றும் நாம் அவரை வேண்டிக் கொள்கிறோம்,