பக்கம்:தமிழின எழுச்சி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 197


ஏனெனில் அவர்க்குக் கிடைத்த இவ்வாய்ப்பு, தமிழினத்துள் இன்றைய நிலையில் வேறு எவருக்கும் கிடைக்கமுடியாத அரிய வாய்ப்பாகும். எனவே, அவர் தமிழினத்தின் முன் இன்றைக்கிருக்கும் முகாமையான சில கடமைகளைச் செய்தே ஆகல்வேண்டும். அவற்றை வேறு எக்காரணம் கொண்டும் அவர் தவிர்த்து விடவோ, கை நெகிழ்த்து விடவோ கூடாது என்று நாம் அவருக்கு நினைவூட்ட விரும்புகின்றோம். 'செய்தக்க அல்ல செயக்கெடும், செய்தக்க செய்யாமையானும் கெடும்' என்னும் குறள் மொழி அவர்க்கு நன்றாகவே தெரிந்திருக்கும் அன்றோ ? -

தமிழினத்தின் மேம்பாட்டுக்கென பல பணிகள்-கடமைகள்செய்யப் பெறல்வேண்டும் என்பதையும், அவை எவை என்பதையும், வேறு யாரையும்விடக் கலைஞர் அவர்கள் நன்கு தேர்ந்து தெளிந்திருப் பார் என்று முழுமையாக நம்புகிறோம். எனினும் அவர் தம்முடைய மெலிவு கருதி இவற்றை முன்னெடுப்பதற்கு ஒருவேளை துணிவு கொள்ளமாட்டாரோ என்று அஞ்ச வேண்டியுள்ளது. அவர் அவ்வாறு துணியாமல் தொய்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நாம் இதை முன்கூட்டியே எழுதவேண்டி வந்தது. இன்றைய நிலையில் தமிழினத்துக்குச் செய்யவேண்டிய கட்டாயக் கடமைகளுள் கீழ்வரும் மூன்று பெரும் பணிகள் மிக மிக இன்றி யமையாதனவாகும். ஒன்று, இந்தித்தடுப்பு, இரண்டு, தமிழீழ அமைப்பு, மூன்று தமிழின உணர்வு மீட்பு - ஆகியவை.

இவற்றை மேலோட்டமாகப் பார்க்கையில், 'இவைதாம் இயல்பாக நடந்து வருகின்றனவே. இவற்றையே ஏன் நாம் இவ்வளவு அழுத்தமாகச் சொல்ல வேண்டும்' - என்று நினைக்கத் தோன்றும். ஆனால், ஆழமாக எண்ணிப் பார்க்கும் உண்மைத் தமிழர் எவரும், இவை நடந்து வருவதற்கான அடையாளத்தைக் கூட காண முடியாமல் உள்ளத்துக்குள்ளேயே பொருமிக் கொண்டிருப்பதை அறியலாம்.

ஆம்! இந்தி எதிர்ப்பு முயற்சிகள் நடந்தன. அவை கடந்த ஐம்பதாண்டுக் காலமாகவே தமிழகத்தில் நடந்து கொண்டுதான் வருகின்றன. பெரியார் செய்யாத இந்தி எதிர்ப்புப் போராட்டங்களா? அதன் பின்னரும் 1965-இல் வலிவான இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒன்று மாணவர்கள் சார்பில் நடத்தப் பெற்றதே! அதன் பின்னரும்கூட, அதையொட்டி எத்தனை மாநாடுகள்; கூட்டங்கள், கிளர்ச்சிகள், போராட்டங்கள்- தனிப்பட்ட கட்சிகள் சார்பிலும், அனைத்துக் கட்சிகள் சார்பிலும், நடத்தப் பெற்றன; ஆனாலும் இந்திக் கோட்டையை ஓர்