பக்கம்:தமிழின எழுச்சி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

202 • தமிழின எழுச்சி



பாரதியாரைத் தலைமேல் வைத்து ஆரியம் கூத்தாடுவதைப் போல், பாரதிதாசனை- அவரின் இனவுணர்வுப் பாடல்களை நாம் பரப்பியாகல் வேண்டும். அத்துடன் நம் தென்மொழிப் பாடல்களை மக்கள் தவறாமல் படித்தறிவதற்கான வழிவகைகள் செய்யப் பெறுதல் வேண்டும். இது நம் இதழைப் பரப்புவதற்கு நாம் கூறும் மறைமுகமாக - கரவான வழியென்று கருதிக் கொள்ளாமல் - உண்மையிலேயே இனமானவுணர்வுள்ள கருத்துகளைப் பரப்புவதற்கு நாம் கூறும் எளிய வழியாகக் கருதிக் கொள்ளுதல் வேண்டும். நமக்கு என்றுமே பொருளியல் நாட்டமோ, புகழ் நோக்கமோ, பதவி எண்ணமோ இருந்ததில்லை என்னபதை நம் அன்புக்குரிய கலைஞர்க்கு நாம் சொல்ல வேண்டுவதில்லை என்று நாம் கருதுகிறோம். எனவே, நாம் என்ன சொன்னாலும் எதைச் செய்தாலும், அவை எல்லாவற்றிலும் தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாட்டு உரிமை ஆகிய முக்கூறுகளே - அவற்றின் நலவுணர்வுகளே - முழுமையாகப் படர்ந்திருக்கும் என்பதை அவர் புதிதாக அறிய வேண்டுவதில்லை. கடந்த முப்பதாண்டுகளாகவே அவர் நம்மை நன்கு அறிந்தவர்; நாமும் அவரை நன்கு தெளிந்துள்ளோம். ஆகவே தென்மொழி பரப்பி வரும் உணர்வுகளும் கருத்துகளும் அவருக்கும் அவர் கருத்துகளுக்கும் ஊட்டமளிப்பவை; உயிர் அளிப்பவை என்பதில் அவருக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியா.

தென்மொழியைத் தொடக்கத்திலேயே கலைஞர் வளரவிடவில்லை என்பதை மிக்க வருத்தத்துடன், இக்கால் அவருக்கு நினைவூட்டிக் கொள்கிறோம். அவரும் அவரது கட்சியும் ஆட்சிக்கு வந்தவுடனேயே, பக்தவச்சலம் காலத்தில் தமிழகத்தின் அனைத்து நூலகங்களுக்கும் போய்க்கொண்டிருந்த தென்மொழி, அரசின் பொருள் முட்டுப்பாடு என்னும் காரணம் காட்டி நிறுத்தப் பெற்றது. அஃது எத்துணை அவலமான நிலை! அன்று தென்மொழியைக் கலைஞர் நிறுத்தாமலிருந்தால், இன்று அவ்விதழ்க் கருத்துகளின் பரவல், அவர்க்கு எத்துணை வலிவை-அரணை-காவலை உண்டாக்கியிருக்கும்! அவர் செய்யவிருக்கும் பணிகளுக்கு எவ்வளவு துணையாகப் பெரும் படைகளை உருவாக்கியிருக்கும் என்பதைக் கலைஞர் தம் விருப்பு வெறுப்புகளை யெல்லாம் தவிர்த்துவிட்டு, ஒரு கணநேரம், கண்களை மூடிக் கொண்டு, சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஒரு வேளை நம் படையோ அல்லது துணையோ தமக்குத் தேவையில்லை, என்று கூடக் கலைஞர் நினைத்திருக்கலாம். அஃது அவ்வாறிருந்தால் நாம் கலைஞர் நிலைக்கும், நினைவுக்கும் இரங்குவதைத் தவிர வேறு வழியில்லை .