பக்கம்:தமிழின எழுச்சி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 
அப்பாத்துரையார் அறிவைப் பேணாத அரசு!


அறிவு பல துறையினது; எனவே அறிஞர்களும் பல துறையினர் ஆவர். தமிழ் எனும் மொழித்துறையும் அதன் புலமைத் துறையும் பற்பல. தமிழில் கலைகளும், பண்பியல்களும், புறத்துறையைச் சார்ந்த அறிவு நிலைகள். தமிழின் மொழியியலும், சொல்லியலும் ஒலியியலும் அதன் அகத்துறையைச் சார்ந்த அறிவு நிலைகள், இசை, இயல், நாடகம் என்பன கலைத்துறை அறிவு நிலைகள், இவற்றுள் இலக்கியமும் இலக்கணமும் இயல்துறையைச் சார்ந்தவை. அறநூல்களும் வாழ்வியல் நூல்களும் பண்பியலைச் சார்ந்தவை. மொழியியலும் அது சார்ந்த இனவியலும் வரலாற்றைச் சார்ந்தவை. இன்னோரன்ன பல்துறைத் தமிழ் அறிவியலில் தனித்தனித் துறையறிவும், பல்துறை அறிவும் சான்ற பேரறிஞர்கள் பலர் அன்றுந் தோன்றினர்; இன்றுந் தோன்றி இருந்து சிறந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே படித்தாய் வளர்ந்தவருமிலர்; வாழ்ந்தவரும் இலர். அவர்களை அடையாளங் கண்டு கொண்டவரும் கொள்பவரும் மிகச் சிலரே!

வாழ்க்கை என்பது வெறும் உயிர் வாழ்தல், பொருளியல் துய்ப்புகளில் மேம்படுதல் என்பன மட்டுமே பொருள் பெறுமாயின், அறிவு வாழ்க்கையே பொருளற்றதாகப் போய்விடும். அறிஞர்களோ பிறவியிலேயே உயர் உணர்வு பெற்றவர்களாக, வாழ்வியலில் அக்கறை கொள்ளாமல், அறிவுத் துறைகளிலேயே தம்மை மூழ்கடித்துக் கொண்ட முழு மாந்தர்களாக வாழ்ந்து சிறப்பவர்களாவர். எனவே அன்றும் இன்றும் என்றும், வறுமை அவர்களுக்கு உயிருடைமையாகவே உள்ளது.