பக்கம்:தமிழின எழுச்சி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் . 205


அவ்வறிஞர்கள் வரிசையில் நம் தமிழறிஞர்கள் தொன்று தொட்டு வறுமையிலேயே செம்மையைக் கண்டவர்களாக இருந்து வருவதை வரலாறு உறுதி கூறும். அறிவு முனைப்பால் முழுமை பெற்றவர்களாதலின், அவர்கள் தம் ஊனுடம்பு ஓம்பும் வெற்று வாழ்க்கைக்காக, எதற்காகவும் எவரிடத்தும் எப்பொழுதும் கூனல் எய்தாக் கொள்கையாளர்களாக இருந்து, தாம் பேசும் தண்டமிழ்க்கும் தாம் வாழும் இனத்துக்கும், தாம் பிறந்த நிலத்துக்கும் அரிய பல தொண்டுகளாற்றி, இறுதிவரை, வாழ்வியலுக்கு உறுதி பயப்பதாம் பொருள் நிலையில் ஒர் இம்மியும் உயராது, வறுமையிலேயே வாழ்ந்து வெறுமையிலேயே மறைவோராக இருக்கின்றனர்.

அவ்வருந்தமிழ்ச் சான்றோர்களுள், அண்மைக் காலத்தே நம்மிடையே தோன்றியிருந்து அரிய பல அறிவுத் தொண்டாற்றி, இறுதியில் கலங்கிய நெஞ்சொடும், கண்ணீர் விழியொடும், காலச் சுழலில் மாய்ந்து போனவர்களான இரு பெரும் புலவர்கள், என்றென்றும் இவ்வினமும் நிலமும் நினைக்கத் தக்க சான்றோர்கள் ஆவர். அவர்கள் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரும், பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையாரும் ஆவார்கள். இவருள் பாவாணரை என் வாழ்வில் நாற்பத்தைந்தாண்டுக் காலம் அருகிருந்து பார்த்தேன்; பன் மொழிப் புலவரை கடந்த முப்பதாண்டுகளாக என் அகத்திருந்து பார்த்தேன்.

இவர்கள் இருவரும் இவ்விருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேரு மலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும், குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெரு மக்கள்! மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறிவாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்களை விண்மீன்கள் என்றால், இவர்கள் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணாளர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டுத் தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். பாவாணர்க்கும், பன்மொழிப் புலவர்க்கும் நெருங்கிய உளத் தொடர்பும், கொள்கைத் தொடர்பும், அறிவுத் தொடர்பும் உண்டு. உழைப்பில் இருவரும் ஊக்கம் இழக்காத ஓர் ஏர் உழவர்கள். யாருக்கும் அஞ்சாத வல்லரிமாக்கள்! தண்டமிழ்த்தாயின் தவப்பெரும் புதல்வர் கள்; வறுமையில் செம்மை காத்த பெருமையாளர்கள்! மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்!