பக்கம்:தமிழின எழுச்சி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

214 • தமிழின எழுச்சி

அறியாமலோ, அந்நூல் கருத்துகளை ஓர் இயக்கக் கொள்கைகள்போல் தெரிவித்துப் பெருமைப்படுத்துவார்போல, அதன் வெளிப்பாட்டு நோக்கத்தைத் திசைதிருப்பல் செய்து, அஃது எந்த விளைவுக்கென எழுதப் பெற்றதோ, அந்த நோக்கத்தையே இத் தமிழ்மக்கள் உணரா வண்ணம் செய்து வருகின்றனர். இக் கருத்துகளையெல்லாம் யாம் ஏறத்தாழக் கடந்த இருபதாண்டுக் காலமாக மிகவும் நுணுகி ஆராய்ந்து, எழுதிக் கொண்டு வரும் 'திருக்குறள் மெய்ப்பொருள் உரையில், தக்கவாறான தடை விடைகளுடனும் சான்றுகளுடனும் எடுத்து விளக்கி, மறுக்க வேண்டுவன மறுத்தும், சிறக்க வேண்டுவன சிறப்பித்தும் காட்டுவோம். ஆனால், அதுவரை திருக்குறள் பற்றிய போலியும் பூசலும் நிறைந்த உரைகளையும், ஊடாட்ட இயக்கங்களைப் பற்றியும் அறிஞர்களும், பொதுமக்களும் மிகவும் எச்சரிக்கையாகவும், விழிப்பாகவும் இருக்க வேண்டும் என்னும் கருத்தில், இச்சிறுவிளக்கத்தினை எழுத விரும்புகிறோம்.

திருக்குறள் தோன்றிய காலத்துத் தமிழ் நிலத்தில் ஆரியம் உட்புகுந்து, தமிழினத்தில் ஏற்கனவே தோன்றிப் பல்கிப் படர்ந்து செழித்திருந்த தமிழிய உட்கூறுகளையெல்லாம் படிப்படியாகத் திரித்தும், திசைத்தும், தம்மினப் படுத்தம் செய்து மூலத்தோற்றத்தையே மறைத்தும் வந்தது. அஃது ஆரிய இனம் வலுப் பெறத் தொடங்கிய காலம். அதை அக்காலத்திருந்த அறிஞர் சிலர் உணர்ந்திருக்கலாம் என்றாலும், வெளிப்படையாக எவரும் எடுத்துப் பேசவோ எழுத்து வழி மக்களுக்கு அறிவிக்கவோ முற்படாதிருந்திருத்தல் வேண்டும். அன்றைய தமிழ் அரசுகளும் அத்தகையவர்கள் துணிவு கொள்ளுமாறு ஊக்கமாக நடந்து கொள்ளாமல், அவ்வாரியப் பசப்பிலும், இற்றை நாள் ஆரிய வல்லாண்மையை நேரிடையாக எதிர்த்துக் கருத்துக் கூறவோ. பாடாற்றவோ துணிவின்றி முடங்கியும் அடங்கியும் கிடக்கின்ற அறிவரையும் புலவரையும் போல, அஞ்சியும் ஒடுங்கியும் கிடந்திருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட கோழைப் புலவருள் ஒருவராக மோழைபட்டுக் கிடக்க விரும்பாத நம் திருவள்ளுவ இனநலப் பேராசான், தம் நுண்ணறிவுத் திறங்கொண்டு, ஆரியத் தாக்கத்தால் அழிந்துவிடாமல், பல்லாயிரமாண்டுகளாக நம் பழம்பெருந் தமிழினத்தில் உருண்டு திரண்டு உருவாகி நிலைபெற்றிருந்த அறிவியல், வாழ்வியல், மெய்ப்பொருளியல் கருத்துகளையும், பண்பாடுகளையும் எதிர்காலத் தமிழின மக்கள் உணருமாறு, இலைமறைகாயாக எடுத்து நிறுவிய இனநலக் காப்பு நூலே நம் அரும்பெறல் செல்வமாகிய திருக்குறள் என்று நாம் தெள்ளிதின் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். இதற்கு அகச் சான்றாகவும் புறச்சான்றாகவும் இருப்பன, திருக்குறளுக்கு