பக்கம்:தமிழின எழுச்சி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 215

முன்னும் பின்னும் இல்லாத அதன் தனிச்சிந்தனையும், இனநல வெளிப் பாடான கருத்துகளுமே ஆகும்.

இவை அனைத்தும் தமிழியல் நலன்களை உள்ளடக்கியவை. தமிழியலும் ஆரியவியலும் மயங்கிக் கிடந்த அந்த வேளையில், தமிழினத்திற்கொத்த தமிழியல் நலன்களை மட்டும் வேறு பிரித்துக் காட்டுகிறது திருக்குறள். அதில் மதமில்லை ; சாதியில்லை ; புராணமில்லை; பொய்யில்லை; கரவில்லை; கதையில்லை. முழுக்க, முழுக்க, தமிழர்கள் பின்பற்றி வந்த பொதுமை நலன்கள், தமிழினத்தின் தோற்றக் காலத்திலிருந்து, அவர் வாழ்ந்திருந்த காலம் வரை, சீரும் சிறப்பும் பெற்ற எந்தமிழ்ப் பேரினம், தன்னுள் தேக்கி வைத்துக் கொண்ட பொதுமை நலம் கனிந்த வாழ்வியல் கூறுகளை ஆவணப் படுத்தி, எழுத்துப் பட்டயமாக அழுத்தி வைத்த அடையாளப் பதிவுகளே திருக்குறள்.

அதில் கூறப்பெறுபவை அனைத்தும் தமிழின நலத்தையும் அதன் தனி மானத்தையும், அதன் அன்பியல், அறவியல், அறிவியல், அரசியல் வாழ்க்கைக் கூறுகளேயாம்! அவை தமிழினத்திற்கு மட்டுமே உரிய தனிநலக் கருத்துகள்! ஆரியத்திற்கோ , வேறியத்திற்கோ அவை இல்லை. அக்கருத்துகளுக்கு மாறானவை தமிழியல் அன்று; ஆரியவியலாகும். எனவே, திருக்குறளை ஒப்பாதவரும் தமிழர் அல்லர். அவர் ஆரியரோ, அல்லது அவர் அடிவருடிப் பிழைக்கும் அடிமைத் தமிழராகவோதாம் இருத்தல் முடியும்.

திருக்குறளில் வரும் கருத்துகளும், கருத்து மூலங்களும் உலகில் வேறு எந்த நூலாசிரியனின் நூலிலும் காணப்படாத தனித்தன்மை வாய்ந்தவை. அதில் கூறப்படும் இறையியல், இயற்கையியல், இல்லறவியல், இல்லறவொழுக்கவியல், பொது மாந்தவியல், அரசியல், பொருளியல், இன்பவியல் ஆகிய அனைத்தும் சரி, அவை கடைப்பிடிக்கப் பெறுங்கால், தமிழியல் தானே மலர்ச்சியுறும்; தமிழினம் தானே வளர்ச்சியுறும்; தமிழ்நிலம் தானே உரிமை பெறும்.

அதில் கூறப்பெறும் துறவறம், காவியும், கமண்டலமும், சடை முடியும், தடிதண்டும் தாங்கிய ஆரியத் துறவறமன்று. தமிழர்க்குப் பொதுமை நலம் நாடித் தந்நலந் துறந்த தறுகண்மை தாங்கும் அறிவு வாழ்வாகும் அது. அதில் காட்டப் பெறும் தமிழர்க்குகந்த தாளாண்மை கொண்ட அறவியல் தழுவிய அரசியல், மனு(அ)தர்மத்தின் மாந்தப் பண்பற்ற ஆரியரின் ஏடாகூட ஏமாற்றுக் கௌடிலிய ஆட்சியைத் தழுவிய மண்ணானமையின் மாட்சியியலாகும், அது! அதில் உணர்த்தப்-