பக்கம்:தமிழின எழுச்சி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 27

யன்றி, சமயத்துறையில் பைபிளுக்கும், குர்-ஆனுக்கும், பகவத்கீதைக்கும் அளிக்கப்பெறும் புனிதத்தை இதற்கு ஏன் கற்பிக்கவில்லை? படித்துப் பாடஞ்செய்யும் ஒரு மனப்பழக்கத்திற்குரிய - தேர்வுக்குரிய நூலாக இதனைச் செய்த கல்வித்துறை, அறிஞர் வாழ்வியலுக்குரிய, மனவளத்திற்குரிய ஒரு நூலாக இதனைக் கொள்ளாததே இதன் பெருமையைக் குறைத்து மதிப்பிடற்குக் கரணியமாக அமைந்தது என்றால் தவறாகாது.

பட்டக் கல்வியில் அரசியல் (Politics), பொருளியல் (Economics) பயிலும் மேனிலை வகுப்புகளில் அரிசுடாட்டிலின், பிளேட்டோவின், கௌடில்யரின் கருத்துகள் கலந்து பயிற்றப் பெறுவனபோல் திருக்குறளின் அறமும் பொருளும் ஏன் பயிற்றப்படக்கூடாது? திருக்குறளில் கூறப்பெறும் கருத்துகள் அரசியல் கற்கும் மாணவர்களுக்குக் கற்பிக்கக் கூடாதனவோ? அதன் பொருளியல் பொருள்படாத கருத்துகள் சான்றனவோ? சமய வகுப்புகளில் திருக்குறள் அறமுறைகளை ஏன் பயிற்றுவித்தல் கூடாது?

இங்ஙன், கல்வித்துறையிலும், வாழ்க்கைத் துறையிலும், அறநெறித் துறையிலும் திருக்குறளுக்குப் போதிய மதிப்பளிக்கப் பெறவில்லை. உலக முழுமைக்கும் பொதுவான அறம் பயிற்றும் நூலான திருக்குறளை ஏன் இலக்கியம் போல மொழிப் பாடங்களில் மட்டும் பயிற்றுவிக்க வேண்டும்? அரசியல், பொருளியல், சமயவியல், அறவியல், மக்களியல் முதலிய அனைத்துத் துறைகளிலும் திருக்குற ளைப் பயிற்றுவித்து அதன் பெருமையினையும் சிறப்பினையும் உலகறியச் செய்தல் இன்றியமையாதது. திருக்குறளை இருட்டடிப்புச் செய்த காலமும் ஒன்றுண்டு. ஆரியர் சூழ்ச்சிக்கும், எரிப்புக்கும் தப்பி இன்றுவரை தமிழர்தம் பெருமைக்கும், பண்பாட்டிற்கும் ஏற்றங்கூறி வரும் பழம்பெரு நூல்கள் இரண்டு. அவற்றுள் ஒன்று திருக்குறள்; மற்றொன்று தொல்காப்பியம். தொல்காப்பியம் தமிழர்களின் வாழ்வியல் இலக்கணங்கூறும் ஒப்பற்ற நூல். திருக்குறள் அதற்கு இலக்கியமாக அமைந்த இணையற்ற நூல். இவ்விரண்டு நூல்களையும் போல் உலகில் வேறெந்த மொழியினும் இனத்தும் வேறுநூல்களைப் பார்க்க முடியாது என்பதை அறிஞர் உலகமே ஒருமுகமாகக்கூறும். இவ்வளவில் தமிழர்தம் ஏற்றத்தைப் பறைசாற்றும் இவ்விரண்டு நூல்களையும் ஆரியர் விட்டு வைத்தற்குக்காரணம் அவற்றையொட்டி யெழுந்த பழங்கதைப் பூசல்களே! பரிமேலழகர் திருக்குறளுக்கு உரையெழுதி யிருக்க வில்லையாயின் திருக்குறளை என்றோ அழித்து விட்டிருப்பர். அவர் உரை திருக்குறளின் உயர்ச்சிகூறி அவ்வுயர்ச்சிக்குக் காரணங்களாக, மனுவையும், கௌடில்யரையும், வாத்சாயனாரையும் கூறி-