பக்கம்:தமிழின எழுச்சி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

28 • தமிழின எழுச்சி

அதன்வழி ஆரியத்திற்குப் பெருமை கற்பித்ததாலன்றோ திருக்குறள் விட்டுவைக்கப் பெற்றது! அதுபோலவே தொல்காப்பியத்தை ஓர் ஆரியப் பார்ப்பனர் முந்து தமிழிலக்கண நூல்கள் முழுமையும் கண்டு முறைமையில் தெளிந்து, தம் ஆரியச்சார்பான கருத்துகளையும் அதனுட் புகுத்திப் புலந்தொகுத்ததாலன்றோ அதுவும் விட்டு வைக்கப் பெற்றுள்ளது!

எனவே, தமிழர் திருக்குறளின் மூலப் பெருமையை முழுவதும் இவ்வீராயிரமாண்டுகட்குப் பின்னாவது நன்கு உணர்ந்து தெளிந்தது தமிழினத்தின் நல்லூழேயாகும். இற்றைத் தமிழக அரசு திருக்குறளுக்கு உரிய சிறப்பை அளிக்க முன்வந்ததும் மிகவும் பாராட்டுக்குரியதும் பெருமைக்குரியதுமாகும். எனினும் திருக்குறள் பெறவேண்டிய சிறப்பை இன்னும் பெற்றுவிடவில்லை. 'இல்லாத ஊர்க்கு இலுப்பைப் பூ சருக்கரை' என்பதுபோல், திருக்குறளே புறக்கணிக்கப்பட விருந்த நிலைக்கு, இக்கால் ஒருவகையில் அது கொண்டாடப் பெறுவது சிறந்ததே; ஆயினும் சிறந்ததோர் நூலையும் நூலாசிரியனையும் கொண்டாடும் வழியும் முறையும் இவ்வளவிலோடமை வனவல்ல.

திருக்குறள் தமிழர்களின் ஆரியக் கலப்பற்ற தனிப்பண்பாட்டு நூலென்பதும், ஆரியம் தமிழ்நிலத்து அடியூன்றிய காலைத் தமிழர் களைக் கட்டிக் காக்கவெழுந்த தூய விடுதலை நூலென்பதும், தமிழர் அறம் உலகளாவிப் பரந்தது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குவதே திருக்குறள் என்பதும், வேறெந்த இனமும் தலைதூக்கித் தம்மையே பாராதவிடத்துத் திருக்குறள் ஒன்றே குன்றேறிப் புறம்பார்த்த நாலென்பதும், உலகின் பொதுச் சமய நூலாக, பொது அறநூலாக, பொதுவான வாழ்வியல் நூலாகத் திருக்குறள் ஒன்றே கொள்ளத்தக்கது என்பதும், மேனாட்டினர்க்கும், இவ்விந்திய நிலத்துண்டம் முழுமைக்கும் விளக்கப் பெறுதல் வேண்டும். திருக்குறள் உலக அரங்கில் வைக்கப் பெறவேண்டிய ஒரு தனி நூல். இதற்கொப்பதும் மிக்கதுமான நூல் வேறெங்கும் எம்மொழியிலும் இல்லை. எனவே 'கல்வி' அளவில் திருக்குறள் கற்கப்பெறுவது மட்டுமன்றி, 'வாழ்க்கை ' அளவில் இந்நூல் பயன்பெறுமாறு செய்வது அரசினரின் தலையாயகடமைகளுள் ஒன்றாகும். அதற்காயவழிகளிலெல்லாம் துணைநிற்பதும் தம்வழி அவற்றைக் கடைப்பிடித் தொழுகுவதும் மக்களுடைய கடமைகள் ஆகும். வளர்க வள்ளுவம்! பரவுக குறள் நெறி!

தென்மொழி சுவடி - 6 ஓலை - 10-11, சனவரி 1969