பக்கம்:தமிழின எழுச்சி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 
தழைக! தமிழ் மருத்துவம்!


தமிழ் மருத்துவம் என்பது குமரிக்கண்டத்து வாழ்ந்திருந்த தமிழ் மக்களுள், இயற்கையியலையும், உடலியலையும், உயிரியலையும் நன்கு தெரிந்து, தேர்ந்து, தெளிந்த நுண்ணறிவு வாய்ந்த சான்றோர்களால் கண்டறிந்து கடைப்பிடிக்கப் பெற்றுத் தொன்றுதொட்டு வழக்கியலில் இருந்துவரும் ஓர் அரிய கலையாகும். இவ் வொப்புயர்வற்ற மருத்துவக் கலை தலைக்கழகக் காலத்தே ஓங்கியிருந்து, கடைக் கழகக் காலத்தே அழியத் தலைப்படுமுன் சித்தர்கள் என்னும் தமிழ் முனிவர்களால் காத்துப் புரக்கப்பெற்று, ஓலைச்சுவடிகள் வாயிலாகவும், அரிய பல மரபுவழிச் செய்திகளாகவும் பிற்காலத்துத் தமிழர்கள் கைகளில் வந்துற்றது. இடையிடையே இம் மருத்துவத்தில் பல பிறழ்ச்சிகளும், முறை மாற்றுகளும், பூசல்களும், அழிவுகளும் நேர்ந்து, இற்றை ஞான்று பற்பல நூல்களின் வடிவிலும், மரபுவழிக் குடும்பத் தொழில் வகையிலும் சித்த மருத்துவம் என்னும் பெயரில் உயிர் பிழைத்து வருகின்றது. சித்தம், சித்தர் என்பன தூய தமிழ்ச் சொற்களே. செத்தல் (கருதுதல்) என்னும் வினையடியாகப் பிறந்த சொல் செத்து-கருத்து; செத்து-சித்து-கருத்து, அறிவு, ஓதி (ஞானம் பாவாணரின் வடமொழி வரலாறு)

அறிவுப் புலனால் தெரிக்கப் பெற்ற மருத்துவமே சித்த மருத்துவம் என வழங்கும் தூய தமிழ் மருத்துவம். இக்காலத்து இந்திய மருத்துவம் என்ற தொகுபெயரின் கீழ்வரும் சித்த மருத்துவமும், ஆயுர்வேதம் என்னும் ஆரியமுறை மருத்துவமும், யுனானி மருத்துவம் என்னும் மேலைமுறையொடு திரிந்த கலவை மருத்துவமும் ஒன்றாகவே -