பக்கம்:தமிழின எழுச்சி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

44 - தமிழின எழுச்சி

போதும். இதற்காக முழுநூலுக்கும் உரையெழுதிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

அதுவும் பாவேந்தர் பாரதிதாசனார் அந்த உரையை மிகவும் புதுமையாக எழுதிவிடவில்லை; ஓரளவு மெய்யறிவு உணர்வோடு சாங்கிய நூல்களின் எடுத்துக்காட்டோடு சில உரைகளை எழுதியிருக்கிறார்; இது தேவையில்லையே!” என்று சொன்னேன். சொல்லிவிட்டுப் போய்விட்டேன்; போய்விட்ட பின்னாலே சாமி-பழநியப்பன் பாவேந்தரிடத்திலே இந்தச் செய்தியைப் போய்ச் சொல்லியிருக்கிறார். “துரை.மாணிக்கம் அங்கு வந்தார்; இந்த உரையை எடுத்துப் பார்த்தார், இப்படிச் சொல்லிவிட்டுப் போனார்" என்று சொல்லியிருக்கிறார். பாவேந்தர் சிறிது நேரம் அப்படியே மலைத்து நின்றாராம்.

பாவேந்தரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். எவ்வளவு பெரிய கூட்டமானாலும் எத்தனைப் புலவர்களிருந்தாலும் தாம் நினைத்ததை, தமக்குச் சரியென்று பட்டதைத் துணிவோடு சொல்லுகின்ற ஒரு பெரிய மறவுணர்வு, துணிவான அந்த ஆற்றல் பாவேந்தர் ஒருவருக்குத்தான் இருந்தது. மற்றபடி பிறரெல்லாரும் வெளியே போய்ச் சொல்வார்கள், வேறு இடத்திலே போய்ச் சொல்வார்கள்; எழுதுவார்கள்; அங்கேயே சொல்லமாட்டார்கள், நேருக்கு நேர் நின்று.

உடனே அமைதியாக இருந்து விட்டு “இதை எதற்கு அவனிடத்திலே காட்டினாய்?” என்றாராம். இல்லை, அவரே, மேசை மேலிருந்ததை; எடுத்துப் படித்தார்" என்று அவர் சொல்லியிருக்கிறார். உம், சரி வைச்சுக்கோ, அதை!" - அவ்வளவுதான். இதைப் பற்றி என்னிடத்திலே அவர் இருந்தவரை கேட்டதில்லை. அந்த நூல் அச்சாவதும் நின்று போய்விட்டது. பதினைந்து படிவங்களோடு முடிந்தது, என்று நினைவு. எதிர்கால உலகம்-தமிழினுடைய எதிர்கால உலகம் - நேற்றுப்போல் இருக்காது என்பதற்கு இந்த எடுத்துக்காட்டை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். புலவர் குழந்தை அவர்களும் பேராசிரியர் இலக்குவனார் அவர்களும் இந்த மேடையில் உட்கார்ந்திருக்கிறார்கள்; அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எதிர்காலத் தமிழ் உள்ளங்கள் உண்மையை மட்டுந்தான் ஏற்றுக்கொள்ளும்; அவ்வளவு திண்மை வாய்ந்ததாக அமையும்; அதை அமைப்போம் என்று சொல்லி, இந்தக் கருத்தைச் சொல்லுகிறேன்.

“யார் வேண்டுமானாலும் திருக்குறளுக்கு உரையெழுதி விடலாம்; நீங்களும் எழுதலாம்; அவரும் எழுதலாம்; பெருஞ்சித்திரனாரும் எழுதலாம்; எல்லாரும் எழுதலாம்" என்றெல்லாம்