பக்கம்:தமிழின எழுச்சி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

46 • தமிழின எழுச்சி

வந்துவிட்டது. உடனே மறுநாள் அந்த மருத்துவரிடம் போய் “நேற்று தொண்டையில் வலி நன்றாகிவிட்டது; இன்றைக்கு வயிற்றிலே வலி தோன்றியிருக்கிறது; இதற்கு மருந்து கொடுங்கள்” என்று கேட்டான். அப்போது அவர், “எனக்குத் தொண்டைக்கு மட்டும்தான் மருந்து கொடுக்கத் தெரியும்; வயிற்றுவலிக்கு வேறு ஒருவரைப் பாருங்கள்” என்று சொன்னார்.

இப்போது இருக்கும் தமிழ்ப் புலவர்கள், பேராசிரியப் பெருமக்கள் எல்லாரும் ஏதாவது ஓர் உறுப்பை மட்டுமே பார்த்து மருந்திடக்கூடிய அளவிற்கு ஆற்றல் பெற்றிருக்கிறர்கள் என்பதை நான் மறுக்கவில்லை . ஆனால் மொழி என்பது கருத்து, அறிவு இரண்டுக்கும் அடிப்படையானது. பெட்டியிலே இருக்கின்ற கருவூலம் போன்றது. அந்தக் காலத்திலே, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நூலில் எழுதி வைத்த கருத்து - ஒரு நூலாசிரியருடைய கருத்து இப்பொழுது உணரப்படுகிறது என்றால், அந்த நூலிலே சூடு இருக்கிறது; குளிர்ச்சி இருக்கிறது; உண்மை தெரிகிறது; அந்தச் சொல்லிலே அவருடைய உள்ளம் தெரிகிறது. அதை எவன் ஒருவன் கண்டு காட்டுகிறானோ அவன் உரையாசிரியன். அந்த உரையாசிரியன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்? அந்தச் சொல்லை உணர்ந்தவனாக இருக்கவேண்டும். சொல்லை, மொழியை, அந்த சொல் அடைந்துள்ள மாற்றத்தை, அந்தச் சொல் வரலாற்றை, அந்தச் சொல் வழங்கிய நிலத்தின் வரலாற்றை, அந்த நிலத்தில் மயங்கிக் கிடந்த பல மக்கள் தொகுதிகளின் வரலாற்றை, அந்தச் சொல் வழங்கிய காலத்தை, இவற்றையெல்லாம் அறிந்தால் தான் அந்தச் சொல்லில் இன்ன பொருளை அவர் வைத்து எழுதியிருக்க முடியும் என்பதை ஒருவாறு கணிக்க முடியும்.

நம்முடைய தமிழாசிரியர்கள் சொல்லை அறிந்தார்களா? அல்லது வரலாற்றை உணர்ந்தார்களா? அல்லது நிலவரலாறு தெரிந்தார்களா? அல்லது இந்த மொழித் தொடர்புடைய மேனாட்டு மொழிகள் சிலவற்றைத் தெரிந்து இந்தக் கருத்து வேறெங்காவது பரவியிருக்கிறதா என்றெல்லாம் தெரிந்தார்களா? தெரிந்து எழுத விரும்புகிறார்களா? என்றால் அதுதான் இல்லை ; “திருக்குறளுக்கு நாமும் ஓர் உரை எழுதி வைப்போம்!” என்று எண்ணி எழுதிய முறைதான் இத்தனை உரைகளைத் தமிழகத்திற்குப் படைத்துத் தந்திருக்கிறதே தவிர, திருவள்ளுவர் ஒன்றும் புரியாத புதிர் அல்லவர். யாருக்குமே விளங்காத வகையிலே ஒரு நூல் எழுதி, ஏராளமான உரைகள் எழுதிக் குவிக்கப்படவேண்டுமென்ற நோக்கத்தில் அவர் எழுதவில்லை. அன்று வழங்கிக் கொண்டிருந்த மொழிமரபையொட்டி, அங்கிருந்த மக்களின் நடைமுறைப்