பக்கம்:தமிழின எழுச்சி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 47

பழக்கத்தையொட்டி, அங்குத் தெரிந்த பழங்கதைகளையும் பரவலான செய்திகளையும் ஒட்டி, அந்தக் காலத்து மக்களின் எதிர்ப்புணர்ச்சியைத் தெரிந்து, அன்றிருந்த தமிழகத்தினுடைய நிலையை யறிந்து, இந்த நூல் வெளிவந்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை உய்த்துணர்ந்து, இயல்பான தம்முடைய அடக்க வொடுக்கத்தினாலே, அந்த நூலை மிக அழகாக, எதிர் காலத்திலே எல்லாத் தமிழருடைய கைகளிலும் அது கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு செய்திருக்கிறார். அப்படிச் செய்திருக்கிறாரென்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு அவர் பெயர் தெரியாமலிருப்பதுதான். அவர் பெயர் தெரிந்திருந்தால் இந்த நூல் இருந்திருக்காது.

“யார் இதைச் செய்தது?” “கருப்பண்ணசாமிக் கவுண்டர் மகன் குப்பண்ணசாமி செய்ததா?” “அப்படியா! எப்படியிருந்தான் அந்தப் பையன்! ஒன்றுமே தெரியாமல் இருந்த அவன் இத்தனை செய்யத் தெரிந்து கொண்டானா?" என்றெல்லாம் இப்பொழுது சொல்லக்கேட்கிறோம். ஆனால் அந்தக் காலத்திலே, சாதியுணர்வும், ஆரிய மோதல்களும் நிறைந்திருந்த காலத்திலே, வள்ளுவருடைய உண்மையான பெயர் தெரிந்திருந்தால், “இந்த ஆளா இதைச் செய்திருப்பான் அடடே! இவனை ஒழித்துக்கட்டு” என்று சொல்லித் தடுத்திருப்பார்கள். இதனாலே வள்ளுவர் தம்முடைய பெயரையும் ஊரையும் பெற்றோர் பெயரையும் பயன்படுத்தாமல், வெகு அழகாக எது தேவையோ அந்த நூலை மட்டுமே செய்து கொடுத்திருக்கிறார். உலகத்திலே வேறு எந்த நூலுமே இப்படி ஆசிரியர் பெயர் தெரியாத வரலாறு தெரியாத நூலாக எழுதப்படவில்லை . அஃது அப்படியே இருக்கட்டும்.

அந்த நிலையிலே இருக்கின்ற ஒரு நூல் வழி, அன்றிருந்த நிலையை இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ள முடியும் என்றால், தொலைநோக்காடி வைத்தன்று! மொழிநூலறிவு இருக்கவேண்டும்; ஒரு சொல்லைப்பற்றி நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்; அந்தச் சொல் எந்தெந்தக் காலத்திலே எப்படியெப்படி மருவி வழங்கியிருக்கிறது என்று தெரிந்திருக்க வேண்டும்; அந்தச் சொல் மருவி மாறிவரும் நிலத்தின் எல்லை தெரிந்திருக்க வேண்டும். அந்தச் சொல்லின் அற்றைய பொருள் தெரிந்திருக்க வேண்டும். “நாற்றம்” என்ற ஒரு சொல் இருக்கிறது. நாற்றம் என்ற சொல் இப்பொழுது சொல்லப்படுமானால் அது தீநாற்றத்தை மட்டும்தான் குறிக்கும். அதையே வள்ளுவர் காலத்தில் சொன்னால் அது மணத்தை மட்டுந்தான் குறிக்கும். இப்பொழுது தீநாற்றத்தைக் குறிக்கின்ற இந்தச் சொல்லை வைத்துக்