பக்கம்:தமிழின எழுச்சி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

56 • தமிழின எழுச்சி


தனிமாந்த வழிபாட்டையே பரம்பொருள் வழிபாடாகக் கொள்ளுவித்துப் பாழியினைச் சேர்ந்த பழங்கொள்கைப் பித்தர்களை மெய்யறிவென்னும் பெயரால் தம்மை வணங்குவித்து வந்த அரவிந்தர் எனும் பாழித் தலைவர் 1950-இல் மாந்தர் எல்லாரையும் போலவே இறந்துபட்டபின், மிரா என்னும் அப் பிரஞ்சுப் பெண்மணியே அன்னை என்ற பெயரில் அரவிந்தர் பாழியினர்க்கு ஒரு வழிபடு தெய்வமாக மாறினார். இன்றும் அப்பாழியினரின் மெய்யறிவுக் கோட்பாட்டில் தலையானவை, அவ் அரவிந்தரின் புதைமேடை (சமாதி)யினை இடைவிடாது வழிபடுவதும், ஒவ்வோர் இளங்காலையிலும் அன்னை எனும் அம்முதிய பெண்மணியின் முகப்பொலிவு காண்டலுமேயாகும். அகவை வரம்பின்றி ஆடவரும் பெண்டிரும் கலந்துறவாடிக் களிப்பதிலும், ஆடல் பாடல்களால் கூடிக் குலாவுவதிலும் உண்டாட்டு, உரையாட்டு, நீராட்டு முதலிய இளமைக்கவர்ச்சிச் செயல்களிலும் மிகுந்த ஈடுபாடுற்ற அப்பாழியினர் உள்நாட்டு அரசியல் அதிகாரிகளையும் வெளிநாட்டுச் செல்வச் செழிப்பினரையும் எளிதே கவர்ந்து வருவதில் வியப்பில்லை. இவ்வகையில் தம் பொருள் வளத்தையும் தம் நிலப்பரப்பையும் குடியிருப்புகளையும் மிகுவாக வளர்த்துக் கொண்ட பாழியினர், தில்லித் தலைமையமைச்சர் உட்பட்ட நடுவணரசு அதிகாரிகளைத் தம் கையகப்படுத்திக் கொண்டு, விரகாண்மையுடன் புதுவையையே சுருட்டித் தம் கட்கத்துள் வைக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர். புதுவை நகரத்தையே “அரவிந்த நகர்" என்று மாற்றிட அப்பாழியினர் அரும்பாடுபட்டதையும், பின், அவ்வாசை அங்கிருந்த முன்னாளைய அரசியல் தலைவர்களின் தலையீட்டால் கை கூடாமற் போனதையும் புதுவை மக்கள் நன்கு அறிவர்.

இன்று, புதுவையின் பெரும்பகுதிக்கட்டடங்கள் அவர்களுக்குச் சொந்தம். அங்குள்ள நிலங்களில் அப்பாழியின் ஆடவரும் பெண்டிரும் தம் களியாட்டக் கூடங்களை மளமளவென்று, அமைத்து வருகின்றனர். புதுவைக்கு வந்து போகும் எவரும் இவ்வுண்மைகளை உணராமல் இருக்கமுடியாது. புதுவையில் எங்கு நோக்கினும் அரவிந்தப் பாழியினரின் முத்திரை குத்தப்பெற்றுக் கிடப்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். முந்தைய பிரஞ்சு அரசினரின் அருமையான ஆட்சி வளத்தால் மேம்பாடுற்று விளங்கிய அங்குள்ள பெரும்பகுதி ஏழைத்தமிழர், அவர்கள் போனபின், தம் வாழ்க்கை வளங்கள் நலிதலுற்று, இன்று அரவிந்தரின் பாழியில் அடைக்கலம் புகுந்து, அங்குள்ள வட நாட்டினர்க்கும் பிற நாட்டினர்க்கும் எடுபிடிகளாகவும், என்பொடியப் பாடுபடும் தொழிலாளர்களாகவும், தம் வாழ்வை நடத்தி வருகின்றனர். இக்கால் அங்குள்ள தலைமைச் செயலர் (அஞ்சனி தயானந்து),