பக்கம்:தமிழின எழுச்சி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 61

-களாகவும், தம் தனி ஒருவர்க்காக நம் இனத்தையே காட்டிக்கொடுக்கும் கயவர்களாகவும், நமக்குள் நாமே அடித்துக் கொள்ளும் காட்டு விலங்காண்டிகளாகவும் இருக்கின்றோமே என்பதை நினைத்தால், நமக்குள் நாமே சிரித்துக்கொள்வதா? அழுது புலம்புவதா? அல்லது நாணி நான்று கொண்டு உயிரை விடுவதா? என்று நினைக்கத் தோன்றுகின்றது.

மானம் மிகுந்த நம் இனந்தான், இன்று மானமிழிந்து மதிகெட்டு ஒரு வேளைச் சோற்றுக்காக மாற்றான் வீட்டு வாயிலில் மண்டியிட்டுக் கிடக்கின்றது. வீரத்தைப் பெரிதாகப் போற்றிய நம் இனந்தான் இன்று வீரமிழிந்து நரம்பு துவண்டு, வீசியெறியப்படும் வெள்ளெலும்புத் துண்டிற்குப் பிற இனத்தவனின் வெளிப்புற வாயிலில் காத்துக்கிடக்கின்றது. காகத்தையும் ஓர் உயிரெனப் பேணிய நம் இனந்தான், இன்று ஒழுக்கத்தை உதறி விட்டு, நாடி நரம்புகளில் நடுக்கமின்றிச் சொல்லில் நாணமின்றி, எத்துறையும் புகுந்து, கிடைக்கின்ற எச்சில் சோற்றுக்கு எச்செயலையும் செய்வதற்கு எப்பொழுது எப்பொழுதெனக் காலம் காத்துக் கிடக்கின்றது. மொத்தத்தில் நாம் நாயினும் இழிந்தவர்களாக, பேயினும் கொடுமை மிகுந்தவர்களாக மாறிவிட்டோம். நம் பெருமை, நமக்குற்ற வாழ்க்கைச் சிறப்பியல்கள் அனைத்தும் காய்ந்த கனவுகளாக, உதிர்ந்த வெற்றுச் சருகுகளாகப் போய்விட்டன. கற்சிலைகளாக இருந்த நாம் இன்று சிதறிச் சிதைந்துபோகும் கற்சில்லுகளாக வீழ்ந்து கிடக்கின்றோம். நம் பெருமை இன்று சிலப்பதிகார, மணிமேகலையாக வடிவமைத்துக்கூறப் பெறுகின்றது; திருக்குறள் பரிமேலழகர் உரையாக எழுதிக் காட்டப்படுகின்றது; சேரன் செங்குட்டுவனாக நடித்துக்காட்டப் பெறுகின்றது.

ஒரு கண்ணகியை வைத்துக்கொண்டே இங்கு உள்ள அனைத்துப் பெண்களையும் கற்பின் கொழுந்துகளாக, பொற்பின் செல்விகளாகப் பிறர்நம்பும்படி நாம் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றோம். ஓர் ஆரியப் படைகடந்த பாண்டியனை நினைவூட்டிக்கொண்டே இங்குள்ள அனைத்துக் கோழையரையும் நெடுஞ்செழியர்களாக விலைபோக்கிக் கொண்டிருக்கிறோம். ஒரு திருக்குறளை வைத்துக்கொண்டே இவ்வுலக முழுவதையும் விலைபேசி வாங்கிவிட முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம். இங்கு நமக்குத் தலைவர்களாக வந்து வாய்த்தவர்களும் நம் அனைத்துப் பேராசைகளுக்கும் ஏற்ற பூசாரிகளாக நின்று, நம்மையே ஆட்டிப் படைத்துக் கொண்டு, நம்மை நாளுக்கு நாள், மேலுக்குமேல் ஏமாற்றிக் கொண்டே இருக்க விரும்புவதுடன், அவர்களின் கரவான ஆனால் கவர்ச்சியான எண்ணங்களுக்குத் தக்கபடி என்றென்றும் நாம் ஏழைகளாகவும் கோழைகளாகவுமே இருக்க வேண்டுமென்றும்