பக்கம்:தமிழின எழுச்சி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

64 - தமிழின எழுச்சி

வயிரத்திற்கு ஒப்பிட்டால் அறிவையும், உண்மையையும் எதற்கு ஒப்பிடுவது? இப்படிப்பட்ட பொய்மை நிரம்பிய - வெறி நிறைந்த சூழ்ச்சிகள் - என்றைக்கும் ஒன்றையொன்று வெற்றி கொண்டதில்லை. எனவேதான் நம் பகைவனும் நம்மை முற்றிலும் ஒழிக்க முடியாமல், நாமும் நம் பகைவனை முற்றிலும் ஒழிக்க முடியாமல் கடந்த மூவாயிர மாண்டுகளாக போராடிக் கொண்டு கிடக்கின்றோம். நம் கடந்த கால வரலாற்றில் நாம் வெற்றி கொண்ட எழுச்சி நிலைகளும், தோல்வியுற்ற வீழ்ச்சி நிலைகளும் மாறிமாறி வந்து கொண்டிருப்பதை எண்ணிப் பார்க்கையில், நம் முனைப்புநிலையில் எங்கோ ஒருகுறைபாடு உள்ளதென்று முடிவுகட்டத் தோன்றுகின்றது. நம் ஒட்டுமொத்தப் போக்கில் கட்டாயம் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே ஆக வேண்டும் என்று உறுதி கொள்கின்றது நெஞ்சம். நமக்குள் இனிமேல் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்ளுதல் வேண்டும். இதுவரை நம்முள் ஒளிந்து கிடக்கும் பொய், பூசல்களும் போலிப் பெருமைகளும் அவ்வப்பொழுது எழுந்து நம்மையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் அலைக்கழிக்கின்றதை நமக்குள் நாமே மூடிப்பழக்கப்பட்டு விட்டோம். நம்முள் ஒருவன் செய்கின்ற சில தீமைகளைச் - சில புரைகளைப் பிறரறியாமல் நாமே மென்று விழுங்கிப் பழக்கப்படுத்திக் கொண்டோம். அவன் செய்கின்ற சில நல்ல செயல்களுக்காக, அவனால் வருகின்ற சில நன்மைகளுக்காக, அவன் எழுப்புகின்ற பொய்மைத் தீ நாற்றத்தையும் போலி யாரவாரங்களையும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று நமக்குள் நாமே கமுக்கமாகப் பேசிக் கொள்கிறோம்; இல்லையா? இவ்வாறு பொய்மையின் குளிரைத் தாங்கிக் கொள்ள முனையும் நாம், உண்மையின் சூட்டைத் தாங்கிக் கொண்டால் என்ன? உண்மையின் சூடு அவ்வளவு கொடுமையானதும் அன்று. பொய்மைக் குளிரிலேயே நம்மை முழுதும் மூடிப் போர்த்துக் கொண்டாகிலும் கிடந்து பழக்கப்பட்டு விட்டதால், உண்மையின் சிறிதளவான சூட்டிற்குக் கூட நாம் துடிதுடித்துக் கண்ணீர் விட்டுக் கதறியழத் தொடங்கி விடுகின்றோம். ஆனால் அவ்வுண்மையின் சூடுதானே பொய்மையின் குளிரை மெய்யாக ஓட்டவல்லது என்று நாம் உணர்ந்து கொண்டு அதைப் பொறுத்துக் கொண்டால் என்ன?

நான் வெளிப்படையாகச் சொல்ல விரும்புவது இது; நம் குறைபாடுகளை நாம் முகத்துக்கு முகம், வாய்க்கு வாய், கண்ணுக்குக் கண் நின்று பேசிப் பழகிக் கொள்ளுதல் வேண்டும். ஒருவனைப்பற்றி அவன் முதுகுப் புறத்திலும் அவன் தூங்குகின்ற பொழுதுமே பேசிப்பேசி நமக்குப் பழக்கப்பட்டு விட்டது. அவன் முன்னுக்குமுன் வந்து நின்று