பக்கம்:தமிழின எழுச்சி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 69

எந்தப் பொதுவான முயற்சியாலும் மீண்டும் தன் நிலைக்குக் கொண்டு வர முடியாத மொழிவீழ்ச்சியும், வலிந்த தொடர்ந்த ஒரு பெரும் போராட்டத்தாலன்றி வேறு எந்தக் காலமாறுதலாலும் மீட்டுக் கொணர முடியாத அரசியல் வீழ்ச்சியும் தமிழினத்திற்கே வந்து வாய்ந்த இருபெரும் சாவக் கேடுகளாகும். இவையிரண்டையும் ஒட்டிப் பேசாத எந்த அரசியல் கோட்பாடும் தமிழனுக்குப் பயன்படப் போவதில்லை . இவற்றை உணர்ந்து கொள்ளாத எந்த அரசியல் தலைவனாலும் தமிழும் தமிழனும் ஒருங்குற முன்னேறப் போவதில்லை.

மாறுதல்கள் வரலாற்றுக்கு வருவதில்லை; வரலாறுதான் மாறுதலை நோக்கி நடையிடல் வேண்டும். எனவே வரலாறு நம் பக்கம் திரும்பி வரும்படி நாம் மாறுதலை உண்டாக்கியாகல் வேண்டும். அம் மாறுதல்களை உண்டாக்கும் வல்லமை சான்ற முயற்சிகள் தமிழினத்திற்கு இரண்டே இரண்டுதாம். ஒன்று மொழி விடுதலை; இரண்டு, நில விடுதலை. இவ்விரண்டு விடுதலைகளையும் பெற்றாலொழிய தமிழன் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முடியாது; தன்னை முன்னேற்றிக் கொள்ளவும் முடியாது. இந்த நிலைப்பாடும் முன்னேற்றமும் இந்தத் தலைமுறையிலேயே நிகழ்ந்தாக வேண்டும். அதற்குத் தமிழனைக் கொண்டு செலுத்தும் ஆற்றல்கள் பல வேண்டும். அவர்களுக்கு இக்கால் கல்வி தேவையில்லை; தொழில் தேவையில்லை; வருவாய் தேவையில்லை; வாழ்க்கை தேவையில்லை; மணம் என்ற கட்டுக்குள் தங்களை உட்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் இரண்டு தரப்பினரும் தங்களுக்குள் ஒருங்கிணைந்தவர்களாக வேறுபாடின்றி ஒத்து நின்று, ஒருங்கே அழியவிருக்கும் தங்கள் மொழிக்காகவும், உரிமைக்காகவும் போராடவேண்டும்; தேவையானால் போரிடவும் வேண்டும். கைகளால் மட்டுமன்று; கருவிகளாலும் அதைச் செய்தாகவே வேண்டும். இதைவிட இந்தத் தலைமுறைக்கு வேறு வேலையிருப்பதாக என்னால் கருதமுடியவில்லை .