பக்கம்:தமிழின எழுச்சி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 
தாறுமாறான தமிழியக்கங்கள்!


ஓரினம் மறுமலர்ச்சியுற்று எழுங்காலைப் பற்பல இயக்கங்கள் தோன்றுவது தவிர்க்க முடியாதது; அது வரலாறு. தமிழினம் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகத் தன் மொழியையும் இனத்தையும் நாட்டையும் பண்பாட்டையும் அரசியலையும், பேணிக்கொள்ளவும் காத்துக் கொள்ளவும் அறியாமலும் இயலாமலும் இருந்து, கடந்த நூற்றாண்டுகளாக மொழியுணர்ச்சியும் இனவுணர்ச்சியும் பெற்று, உலக இனங்களோடு, தன்னை ஒப்பவைத்துக் கொள்ளவும் தக்க வைத்துக் கொள்ளவும், அரும்பாடுபட்டு வருகின்றது. இவ்வடிப்படையில் ஆங்காங்கே பல்வகையான எழுச்சிகள் தோன்றுவதும், இயங்குவதும், அவற்றுள் பற்பல சிதைந்து வீழ்வதும், சிற்சில அதைந்து வாழ்வதும் தவிர்க்கவியலாத இயற்கையான படிநிலை வளர்ச்சிக் கூறுபாடுகள் ஆகும்.

இருப்பினும், இவ்வாறு தோன்றுதலும் மாறுதலும் மடிதலும் செய்கின்ற எழுச்சிகள் - இயக்கங்கள் ஒருவகையான அறிவுநிலைப் பொருத்தத்தோடும், பொதுநிலை உணர்வோடும், அதர்ந்தெழும் முயற்சியோடும் இயங்கத் தொடங்கின. தோற்றங்கள் பலவாறாக இருக்கத் தேவையில்லை. முயற்சிகளும் வீணாகக் கரணியமில்லை. அவ்வாறின்றி, பொதுவுணர்வெழுச்சியோடு இயங்க எண்ணித் தொடங்கும் இயக்கங்கள், இடையிடைப் பல தந்நலவுணர்வுகளால் தடைப் படுத்தப்பெற்றும், திசைமாற்றப் பெற்றும், கொள்கை திரிக்கப் பெற்றும், கூறு சிதைக்கப் பெற்றும், மாறுபட்டும், வேறுபட்டும், அழிக்கப்பெற்றும், ஒழிக்கப்பெற்றும் போவதை எண்ணத் தொடங்குகையில்தான், என்னே, இத் தமிழர்களின் உணர்வுப் பிதுக்கம் இருந்தவாறு, என்று இரங்கவும் ஏங்கவும் வேண்டியுள்ளது.