பக்கம்:தமிழின எழுச்சி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

86 - தமிழின எழுச்சி

யும் தன்னைச் சார்ந்தவர்களையும் நிலைப்படுத்திக் கொள்ளவே நினைப்பான். அவன் செயல்கள் ஒவ்வொன்றும், அந்நிலைப்பை அடியொட்டியே இயங்கும். தன் தனிப்பட்ட ஈட்டத்திலேயே அவன் அவ்வாறு செய்வதாகத் தன்னைச் சரிகாட்டியும் அவன் பேசுவான். எனவே தன் தனிநிலை நாட்டங்களுக்கு நயன்மை காட்டியுரைப்பதில் அவன் அறிவு வல்லமையை நன்கு பயன்படுத்துவான். அதனால் அவன் பேச்சுகளின் பெரும்பகுதி பிறரைப் பற்றியதாகவே இருக்கும். பிறரின் இயக்கங்கள் நேர்மையாக இல்லை என்பதையே அடிக்கடிச்சுட்டுவான். அப்பேச்சினால் தன்பால் வருபவர்களின் நோக்கத்தையும் எண்ணத்தையும் பிறர்பால் திருப்புவதிலும், அவர்களின் பார்வையைத் தன் நிலைப்போக்கில் திரும்பவொட்டாமல் தடுப்பதிலுமே மிக்க கவனம் செலுத்துவான். எனவே அவன் தன்னுடன் யாரையும் உறவாடவிடாமல் மிக்க கவனமாக இருப்பான். தன் வீட்டில் உண்டு உறையுள் கொள்ள அவன் எவருக்கும் வாய்ப்புக்கொடான். அவ்வாறு கொடுத்தால் பிறர் தன்னின் உள்முக நாட்டங்களைக் கண்டுகொள்ள வேண்டி வருமே என்று அவன் மிகவும் அளவிட்ட நிலையில் இயங்குவான். அவ்வாறு பிறர் செய்வதை 'ஊதாரித்தனம், என்றும் 'தவறு' என்றும் கூறுமுகத்தான், தன் ஒழுக்கத்திற்கு நயன்மை கற்பிப்பான். தன்னைக் கூர்மையாக நோக்கும் பிறரைக் கண்டால் அவனுக்குப் பிடிக்காது. தன்னை உட்படுத்திச் செய்யப்பெறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலும் அவனுக்கு விருப்பமிராது. மேடையில் ஏறி நின்று மக்கள்முன் வெளிப்படவே அவன் விருப்பங் கொள்வான். அவ் விருப்பமின்மையை வெளியே காட்டிக்கொள்ளாமல் விருப்பத்துடன், அந்நிலையால் தனக்குப் பழி மேவாதிருக்கும் பொருட்டு அப் பொது நிகழ்ச்சிகளையே பலவாறு குறைகூறித் தன் விலக்கீட்டிற்குப் பெருமை சாற்றுவான். எனவே தன்னலவுணர்வுள்ளவனின் தன்நிலைப் பொருள் நாட்டத்தை எவரும் எளிதில் காண முடியாமல் அவன் இயக்கத்திற்கும் சிலர் வலிமை கூட்டுவது தவிர்க்கமுடியாமற் போகின்றது.

இனி, இன்னும் சில போலி நிலையாளர்கள் மேற்சொன்ன நடைமுறைகளுக்கு மாறாகவே இருப்பர். அவர்கள் ஆரவாரமாகப் பேசுவர். தம் அறிவு நிலைகளுக்கு மேலான பேச்சுகளையும் எவ்விடத்தும் வாயவிழ்த்துத் தம் தகுதி நிலையினை உறுதிப்படுத்த முயல்வர், தாம் பிறரைப் போலன்றி மிக விரைந்து தம் இயக்க நோக்கத்தை நிறைவேற்ற முடியுமென்றும், ஆனால் தமக்கும் சிலர் உதவ முன்வரவேண்டும் என்றும் பலவாறு வாய்வலிமை காட்டித் தம் பொருள் நாட்டத்தைத் தீர்த்துக்கொள்ள முயல்வர். இத்தகையவர்களே ஓர் இயக்கச் சிதைவை மிக விரைந்து தோற்றுவிக்கின்றனர்.