பக்கம்:தமிழின எழுச்சி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 87


இனி, இயக்கச் சிதைவிற்கு முதற் கரணியமாகிய கருத்து வேறுபாடு ஓரளவு அறிவுணர்வின் பாற்பட்டதாக இருக்க, இவ்விரண்டாவது கரணியமாகிய பொருள் நசை ஓரளவு அன்பின்பாற் பட்டதாகவே இருக்கும். தன்னலவுணர்வாளன் ஒருவனுக்கு முதற்கண் தன்மேலேயே மிகுந்த அன்பிருக்கும். அவன் தன்னையே மிகவும் காதலித்து ஒழுகுவான். தன் வாழ்வே அவனுக்கு நிறைவளிக்கக் கூடியதாக விருக்கும். தன்னையன்றிப் பிறர் அனைவரும் சரியானவர் அல்லர் என்றும், தான் ஒருவனே மிகச் சரியானவன் என்றும் கருதுகின்ற போலி அறிவு நிலையும், குருட்டு அன்பு நிலையும் அவனைப் பற்றியிருக்கும், பிறருக் காகத் தன்னை இழந்து கொள்ள அவன் ஒருபோதும் விரும்பான் பிறருக்காக ஒரு காசையும் செலவிட அவன் ஒருபோதும் ஒருப்படான். ஒரோவொருகால் செலவழிக்க நேரினும், அதைத் தன் பொதுமை உணர்வுக்குச் சான்றாகக் கருதியும் பேசியும் பெருமைப்பட்டுக் கொள்வான். பொதுநிலையில் அவன் துன்பப்படுவதை அவன் ஒருபோதும் விரும்புவதில்லை. தன்னை விரும்புபவர்களையே அவனும் விரும்புவான். அவர்களையே அவன் உறவாக்கிக் கொள்வான். தன் குடும்பம், சுற்றம் இவர்களுக்காகவே தன் நிலையை அவன் உயர்த்திக் கொள்ள விரும்புவான். தன் மனைவி மக்கள் நலத்தையே அவன் உள்நோக்கமாகக் கொண்டு ஒழுகுவான். அதனையே சிறந்த இல்லறவொழுக்கம் என்று பிறர் நம்பும்படி பெருமை பேசுவான். தான் அன்பில் சிறந்தவன் என்றும், பிறர் அன்பில் குறைந்தவர் என்றும் திரையிட்டுப் பேசுவான். பொதுவுணர்வுள்ளவனின் விருப்பு வெறுப்பற்ற தன்மையைத் தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொண்டு, அவனை உண்மையான அன்பில்லாதவன் என்று குறைகூறிப் பழிப்பான். இந்நிலைகளை ஒருவன் தெளிவாக அறிந்து தேர்வது மிகவும் கடினம் என்பதை அனைவரும் முதற்கண் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

உண்மைக்கு மாறான பொய்ம்மை நிலை, வெள்ளைக்கு மாறன கருப்பு நிறம்போல் எளிதே புலப்படுவதாகும். ஆனால் உண்மையைப் போலும் உள்ள பொய்ம்மை நிலை, ஆவின் பாலும் கள்ளிப்பாலும் போல் எளிதே புலப்படாததாகும். நெடுங்காலப் பழக்கத்தாலும் பயன் விளைவாலுமே உண்மை நிலைகளை ஒருவன் நன்கு உணர்ந்து கொள்ளல் இயலும். இப்படித் தானும் ஈடுபடும் இணைவு நிலைகளும், காலம் அறிவிக்கும் வரை காத்திருக்கும் பொறுமை நிலைகளும், உண்மையையும், போலியையும் எடையிடுவார்க்கு மிகவும் இன்றிய மையாத பண்புகளாம். அவை அனைவர்க்கும் சமநிலையில் அமைந் திராவாகையாலும், உண்மைக்கும் போலிக்கும் மிகுவேற்றுமை இன்மையாலும், உலகில் பலவகையான இயக்கச் சிதைவுகள் நேர்ந்தபடியே இருக்கின்றன. இவ்வந் நிலைகளில் ஏற்படும் இயக்கச் சிதைவு