பக்கம்:தமிழின எழுச்சி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

98 - தமிழின எழுச்சி

நின்று இற்றை வரை உள்ளும் புறமுமாய்ப்பிடித்து அலைக்கழித்துக் கொண்டிருக்கும் ஆரியம் என்னும் அச்சழியாத வீரியப் பேயை இனமும் இடமும் காட்டி, ஓரளவேனும் உய்ந்துவர மாட்டானா என்னும் ஒழியாகக் கழிவிரக்கத்துடனும், அழியாக் கொள்கை உரனுடனும், தம் தம் வாழ்வையும் மூச்சையும் முற்றுவித்துக்கொண்ட - கொள்கின்ற முயற்சிகள் பலவாகும்.

அம் முயற்சிகளிலெல்லாம் கொடுமுடியாக விளங்கிக் கொண்டிருக்கும் இற்றை நூற்றாண்டின் இறுதி முயற்சிகளும், இக்கால் உள்ளுடைந்து விரிசலுற்றுப் போய்விடுமோ என்றெண்ணிக் கலங்கிக் கண்ணீர் வடிக்குமாறு, இவ்வினத்தைக் கட்டிக் காக்கின்றோம் என்று சூளுற்று முன்வந்த அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும், தம்தம் சொல்லம்புகளையும் வில்லம்புகளையும் தமக்குள் தாமே எய்து போரிட்டுக் கொண்டு அழிந்துபோகின்ற காட்சிகள் இன்று நடந்து கொண்டிருக்கின்றன. இப்பூசல்களையும் ஏசல்களையும் நம் கண்களும் காதுகளும், கரிக்கவும் கடுக்கவும், பார்க்கவும் கேட்கவும் நேர்ந்துள்ள ஒரு நிலை, இவர்கள் கட்டிக்காக்கப் புகுந்த தமிழினத்தின் இழிந்து, இடிந்துபோன நிலையிலும் மிகமிக இழிவும் இரக்கமும் உடையதாகும். இனி இவையிரண்டினும் நாணத்தக்கதாகும், நம் எதிரிகளும் படித்து எண்ணி மகிழும்படியும் மேலும் அவர்கள் வழியில் எச்சரிக்கையாக இருக்கும்படியும், நாம் அவர்களுக்குத் துணையாக இதனை இங்கு வெளிப்படையாக எடுத்துக் கூறப்போகும் தவிர்க்கவியலாத இவ்விழிநிலை.

பொதுவாகவே வேறு எந்த இனத்தைக் காட்டிலும் தமிழினத்தில் உட்பூசல்களும் உள்ளுடைவுகளும் மிகுதி. இதனை இந்நிலத்து வாழும் வாய்ப்பினின்று தப்பி, அயல்நிலத்துச்சென்று வாழும் தமிழரிடையேயும் காணலாம். இதற்கு அடிப்படைக் கரணியம், வேறு எவ்வினத்தை விடவும் இவ்வினத்திற்கே இயல்பாக அமைந்துள்ள மானவுணர்வுதான். மானம் என்பது அறிவின் படிநிலைப்பட்டு வளரும் ஒரு நல்லுணர்வாகும். ஆனால் அவ்வறிவினும் கூரியதாகும், மெய்ப்பொருளியலின்படி, அறிவுணர்வு என்பது பிரிவுணர்வாகும். அன்புணர்வு என்பது செறிவுணர்வாகும். எந்த ஓர் இருவரிடை அறிவுணர்வு மட்டும் மிகுந்து விளங்குகின்றதோ. அவரிடைப்பிரிவுணர்வும் அந்த அளவில் மிக்கு விளங்கும். எனவேதாம், அறிவுணர்வு மிகமிக அன்புணர்வும் மிகுந்து தோன்றி, அவ்வறிவுணர்வால் ஏற்படவிருக்கும் பிரிவைக் கட்டிக் காத்துக்கொள்ள வேண்டும் என்பது மெய்ப்பொருளியலாரின் உயிரியற் கொள்கையாகும். இதனைப் பண்டைத் தமிழ் முனிவோர் தாம் கண்டு